ரியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற 100 மீ. பட்டர்பிளை நீச்சல் போட்டியில் பெல்ப்ஸை சிங்கப்பூரைச் சேர்ந்த 21 வயது ஜோசப் ஸ்கூலிங் தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார். ஜோசப், பந்தய தூரத்தை 50.39 விநாடிகளில் கடந்து ஒலிம்பிக் சாதனை செய்தார். பெல்ப்ஸுக்கு இரண்டாம் இடமே கிடைத்தது. தனிநபர் பிரிவில் பெல்ப்ஸ் பங்கேற்ற கடைசி போட்டி இது. அடுத்ததாக அவர் 400 மெட்லி தொடர் போட்டியில் பங்கேற்கிறார்.
இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பெல்ப்ஸ், இதுவரை 27 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த ஒலிம்பிக்கில் பெல்ப்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். அவர் 200 மீ. பட்டர்ஃபிளை, 4*200 மீ. ஃப்ரீஸ்டைல் தொடர், 4*100 மீ. ஃப்ரீஸ்டைல், 200 மீ. மெட்லி ஆகிய நீச்சல் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.
கடந்து வந்த பாதை: 31 வயதான பெல்ப்ஸ், 2000-ம் ஆண்டில் நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் போட்டியின் மூலம் ஒலிம்பிக்கில் காலடி எடுத்து வைத்தார். அப்போது அவருக்கு வயது 15. அதன்மூலம் 68 ஆண்டுகால அமெரிக்க நீச்சல் வரலாற்றில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அந்த ஒலிம்பிக்கில் பதக்கம் ஏதும் வெல்லாதபோதும், 200 மீ. பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்து உலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.
2004-ல் நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கம், இரு வெண்கலம் வென்ற பெல்ப்ஸ், 2008-ல் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தான் பங்கேற்ற 8 பிரிவுகளிலும் தங்கம் வென்று புதிய சகாப்தம் படைத்தார். அதன்பிறகு 2012-ல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கம், இரு வெள்ளி வென்றார்.
இந்த நிலையில் இப்போது 5-வது ஒலிம்பிக்கில் (ரியோ ஒலிம்பிக்) பங்கேற்றுள்ள பெல்ப்ஸ் இதுவரை 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இன்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். இதன்மூலம் அவர் ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் 5-வது முறையாக பங்கேற்றுள்ள நீச்சல் வீரர் பெல்ப்ஸ், ரியோ போட்டிக்கு முன்பு ஒலிம்பிக்கில் 18 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அவர் 3-வது பதக்கத்தை வென்றபோது ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்றவரான சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லாரிஸாவின் 48 ஆண்டுகால சாதனையை (18 பதக்கம் வென்றது) முறியடித்தார்.
இந்தியாவைத் தாண்டினார்: அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் தனியொருவராக ஒலிம்பிக்கில் இதுவரை 27 பதக்கங்களை வென்றுள்ளார். ஆனால் 1900 முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் இந்தியா, இதுவரை ஒட்டு மொத்தமாக 26 பதக்கங்களையே வென்றுள்ளது. பெல்ப்ஸ் 22 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஆனால் இந்தியா 9 தங்கப் பதக்கங்களையே வென்றுள்ளது. இதில் ஹாக்கியில் 8 கிடைத்துள்ளது. தனிநபர் பிரிவில் இந்தியா ஒரேயொரு தங்கம் (2008-ல் அபிநவ் பிந்த்ரா வென்றது) மட்டுமே வென்றுள்ளது.
உலக வரைபடத்தில் ஒளிந்திருக்கும் நாடுகள்கூட ஒலிம்பிக்கில் ஜொலிக்கிறது. ஆனால் உலகின் 2-வது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தியாவின் பதக்க எண்ணிக்கையோ, தனியொரு வீரர் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையைக்கூட தாண்டவில்லை என்பது வேதனைக்குரியது.
news dinamani thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக