jothika20 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்த 22 வயது இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மோசடி பெண் பெயர் ஜோதிகா பட்டேல்.
இது அவருடைய உண்மையான பெயரா என்று தெரியவில்லை. இவரிடம் கடைசியாக ஏமாந்தவர் சமீர் லோக்கானே. இவர் மும்பை போரிவலியில் உள்ள கொராய் பகுதியை சேர்ந்தவர். சமீருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் பெண் தேடியபோது, உறவினர்கள் மூலமாக ஜோதிகா அறிமுகமானார். குஜராத் மாநிலம் வல்சாட்டில் உள்ள வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடந்தது.
அப்போது, ஜோதிகாவின் உறவினர்கள் ஏராளமாக இருந்தனர். ‘நான் ஏழை. என்னால் நகை எதுவும் போட்டு வர முடியாது. ஆனால், உங்களுக்கு நல்ல மனைவியாக இருப்பேன்’ என்று சமீரிடம் ஜோதிகா கூறினார். மகிழ்ச்சி அடைந்த சமீர், திருமணத்துக்கு சம்மதித்தார். கடந்த மார்ச் 19ம் தேதி மும்பையில் திருமணம் நடந்தது. ஏழை என்று ஜோதிகா கூறியதால், திருமணம் முடிந்ததும் அவருடைய அம்மா, அத்தைக்கு ரூ1 லட்சம் தருவதாக சமீர் கூறினார். அதன்படி, திருமணம் முடிந்ததும் ஜோதிகாவிடம் ஸி1 லட்சத்தை கொடுத்தார்.
திருமணம் நடந்த அன்றே இருவரும் போரிவலி ஷாப்பிங் சென்டருக்கு சென்றனர். அங்கு, தனக்கு வாந்தி வருவதுபோல் இருப்பதாக கூறிய ஜோதிகா, ‘இதோ வருகிறேன்’ என்று சமீரிடம் சொல்லி விட்டு சென்றார். பிறகு வரவே இல்லை. செல்போனில் தொடர்பு கொள்ள சமீர் முயன்றபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஜோதிகாவின் அத்தை, அம்மாவின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த சமீர், வல்சாட்டில் உள்ள தனது உறவினர்களை தொடர்பு கொண்ட ஜோதிகாவின் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.
உறவினர்கள் சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. விசாரணையில், ஜோதிகா ஒரு நாளைக்கு மட்டும் ரூ10,000 கொடுத்து வீட்டை வாடகைக்கு எடுத்ததாக வீட்டு உரிமையாளர் கூறினார். அப்போதான், ஜோதிகா தன்னை ஏமாற்றியதை சமீர் உணர்ந்தார். இது பற்றி போரிவலி போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், ஜோதிகாவின் அம்மாவாக நடித்த கல்பனா பட்டேலையும், அத்தையாக நடித்த ஆஷா பட்டேலையும் கைது செய்தனர்.
அம்மாவாக நடிக்க ஜோதிகா ரூ1,000 தந்ததாக கல்பனா கூறினார். ஜோதிகாவின் உறவினர்கள் என்று கூறப்பட்ட அனைவரும் போலிகள் என்றும் விசாரணையில் தெரிந்தது. ஜோதிகா இதுபோல் 20 ஆண்களையாவது ஏமாற்றி பெரிய தொகையை மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால், அவரை தேடி வருகின்றனர்.தகவல்:தினகரன் siruppiddy   thanks