8 Jan 2013
பெங்களூர்:அநியாயமாக பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில்
கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உடல்நலக் குறைவால் துயரமடைந்த அப்துல்
நாஸர் மஃதனி மருத்துவமனையில் உயர்சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா
மாநிலம் பரப்பனா அக்ரஹார சிறையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள வைட்ஃபீல்டில்
தனியார் ஆயுர்வேத மருத்துவமனையான சவ்கியாவில் மஃதனி
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொந்த செலவில் சிகிட்சை நடத்த அனுமதிக்குமாறு அப்துல் நாஸர்
மஃதனி உயர்நீதிமன்றத்தில் அளித்த கோரிக்கை ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சவுகியா
மருத்துவமனையில் சிகிட்சைக்காக மஃதனி விண்ணப்பித்திருந்தார். மேலும் சிகிட்சையின்
போது மகன் உமர் முக்தார், மனைவி சூஃபியா ஆகியோர் உடனிருக்க விசாரணை நீதிமன்றம்
அனுமதி அளித்திருந்தது.
நீதிமன்ற உத்தரவு நேற்று காலை 10 மணிக்கு சிறை
அதிகாரிகளுக்கு கிடைத்தது. 3 மணிநேர நடவடிக்கைகளுக்கு பிறகு மதியம் 1.10 மணிக்கு
ஆயுத போலீஸ் பாதுகாப்புடன் மஃதனி மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்லப்பட்டார்.
சவுகியா மருத்துவமனை இயக்குநர் டாக்டர்.ஐஸக் மத்தாயி
மஃதனிக்கு ஆரம்பக் கட்ட பரிசோதனைகளை நடத்தினார். உயர் சிகிட்சை முறைகள் இன்று முதல்
துவங்கும். 15 ஆயுதம் ஏந்திய போலீசார் மஃதனி அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே
காவலில் ஈடுபட்டுள்ளனர். மஃதனியின் மனைவி, மகன் ஆகியோரிடமிருந்து செல்ஃபோன்களை
போலீஸ் வாங்கிவிட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காலக்கட்டத்தில்
பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
ஒன்றரை ஆண்டிற்கு முன்பும் மஃதனி இதே மருத்துவமனையில்
சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 3 மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை நடத்தி
தொடர் சிகிட்சை அளிக்கப்படவேண்டும் என்று மஃதனி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால்,
சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவருக்கு தொடர் சிகிட்சை மறுக்கப்பட்டது. இதனைத்
தொடர்ந்து இதனைச் சுட்டிக்காட்டி சொந்த செலவில் சிகிட்சை நடத்த மஃதனி
நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.
மஃதனியை மருத்துவமனையில் உடனிருந்து கவனிக்க, களமசேரி
பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மஃதனியின் மனைவி சூஃபியாவுக்கு
கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றம் அவருக்கு ஐந்து வாரங்கள் சலுகை
அளித்துள்ளது.
.thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக