உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பிப்ரவரி 4
''சினிமா தியேட்டரில், 'என் பெயர் முகேஷ்... எனக்கு வாய்ப் புற்றுநோய்’ என்று ஆரம்பித்து, அவருக்கு வயது 24, முகேஷ் தற்போது உயிருடன் இல்லை, என்று முடியும் விளம்பரத்தைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கும். இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற முகேஷ் போன்றோர்க்குத்தான் இதுபோன்ற வியாதிகள் வரும். நம் ஊரில் எல்லாம் இந்த அளவுக்குப் பிரச்னை இல்லை என்று பலரும் அந்த விளம்பரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால், தமிழகத்திலும் வாய்ப் புற்றுநோய் அதிகமாக இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த முகம் மற்றும் தாடை, பல் சீரமைப்பு மருத்துவர் கண்ணபெருமான்.
'உலக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோயாக முதல் இடத்தில் மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. புகையிலைப் பொருட்களால் ஏற்படக்கூடிய புற்றுநோய், ஆண்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. புகைபிடிப்பது, பான் மசாலா, புகையிலை மெல்லுவது போன்ற செயல்களால், 10-ல் நான்கு பேருக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தப் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களும், 18 சதவிகிதப் பெண்களும் உயிரிழக்கின்றனர்.
புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, வாயின் உள்பகுதியில் புண் போல ஆரம்பிக்கும். அது கொஞ்சம் கொஞ்சமாக உதடு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் என மற்ற எல்லாப் பகுதிகளையும் தாக்கி, மிக மோசமான வாய்ப் புற்றுநோயாக உருவெடுத்துவிடுகிறது.
சமீபத்தில் பொறியியல் படிக்கும் மாணவர் ஒருவர், என்னிடம் பல் வலி என்று வந்தார். பரிசோதித்ததில், அவருக்கு வாய்ப் புற்றுநோய் இருந்தது. நான்கு ஆண்டுகளாக அவருக்கு, புகைபிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. சிலர், 'நான் ரொம்ப வருஷமா சிகரெட் பிடிக்கிறேன்... எனக்கு எந்த வியாதியும் இல்லை’ என்று பெருமையாகச் சொல்லுவார்கள். புற்று நோய் என்பது எப்போதும் வரலாம். புகைக்கும் அளவையும், பான் போடும் அளவையும், நம்முடைய நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பொருத்துதான் நோய் வருவதற்கான வாய்ப்பு அமையும்' என்றவர், வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிகளைச் சொன்னார்.
தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையே உள்ள அழுக்கை அகற்ற ஃபிளாஸ் பயன்படுத்த வேண்டும்.
புகையிலை மெல்லுவதை, புகைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். வாயில் சிறிய புண் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.
மஞ்சள், அடர் பச்சை நிறக் காய்கறிகள், கீரை, பூண்டு, திராட்சை, க்ரீன் டீ, சோயா, தக்காளி போன்ற உணவுகளைச் சாப்பிடுவது புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரைச் சந்தித்து வாய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாதத்துக்கு ஒரு முறை கையடக்கக் கண்ணாடியைவைத்துக்கொண்டு, வீக்கம், புண் போன்று ஏதேனும் உள்ளதா என்று பார்த்து, சந்தேகப்படும்படி இருந்தால், உடனடியாக உங்கள் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
- சண்.சரவணக்குமார், படம்: பா.காளிமுத்து
புற்றுநோய்... பீதி வேண்டாம்!
''எந்த ஓர் அறிகுறியுமின்றிப் புற்றுநோய் தாக்கும், புற்றுநோயை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது'' என்பது போன்ற தவறான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. இவற்றைக் களைந்து, புற்றுநோய் தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு, புற்றுநோய் தினம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருவருக்கு புற்றுநோய் என்று கண்டறிந்தால், அது அவரது வாழ்க்கையையே புரட்டி எடுத்துவிடுகிறது. அதிர்ச்சி, பயம், கோபம், சோகம், தனிமை, மனப்பதற்றம் என்று பல விஷயங்கள் அவரைத் தாக்குகின்றன. குடும்பத்தினர், நண்பர்கள் அவருடன் பேசுவதன் மூலம் இதிலிருந்து அவர் விடுபட முடியும்.
பல வகையான புற்றுநோய்களுக்கு அறிகுறிகள் உள்ளன. இதன் மூலம் ஆரம்பநிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து குணப்படுத்த முடியும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மது அருந்தாமல், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பை நம் ஒவ்வொருவராலும் தவிர்க்க முடியும்.
தேசிய, மாநில அளவில் உள்ள ஆட்சியாளர்கள் நினைத்தால், 'புகையிலைப் பொருள்களுக்குத் தடை’ என்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
vikatan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக