Jan 2014
புதுடெல்லி: திருமணத்துக்கு முன்பாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவினை, பலாத்காரமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை அளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் மீது, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தில்லி போலீஸாரிடம் கடந்த 2011ஆம் ஆண்டு புகார் தெரிவித்தார்.
அதன் பேரில் அந்த இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி வீரேந்தர் பட் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவினை பலாத்காரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தார்.
படித்து விட்டு அலுவலகம் செல்லும் அந்தப் பெண் சுய விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துள்ளார். வாக்குறுதி அளித்தபடி அந்தப் பெண்ணை அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அது பாலியல் பலாத்காரம் ஆகாது. தனது செயலால் ஏற்படும் பின்விளைவுகளை அந்தப் பெண் உணர்ந்து பார்த்திருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் ஒரு நபர் அளிக்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. சம்பந்தப்பட்ட ஆண் வாக்குறுதியை நிறைவேற்றலாம், அல்லது நிறைவேற்றாமலும் போகலாம். அனைத்து மதச் சித்தாந்தங்களுக்கும் எதிரான ஒழுக்கமற்ற செயலில் ஈடுபடுகிறோம் என்பதை அந்தப் பெண் உணர்ந்திருக்க வேண்டும்.
உலகில் எந்த மதமும் திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவு வைத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞரை விடுவித்து அவர் உத்தரவிட்டார்.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக