திருச்சி: திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு இடம் கொடுத்த 4 குடும்பத்தினரை, அந்த கிராம மக்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் பேருந்துகள் போகாத கிராமங்களில் கூட டாஸ்மாக் கடைகளை திறந்து சாதனை புரிந்துள்ளது தமிழக அரசு. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா புரத்தாக்குடியை அடுத்துள்ளது வடக்கு மகிளம்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சப்பானி உடையாரின் மகன் சங்கர். இவர் இன்று தனது அண்ணன் ராமஜுடன், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனிடம் நேரில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ''புரத்தாக்குடியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை எங்கள் கிராமத்திற்கு மாற்றிட மூன்று மாதத்திற்கு முன்பு எங்களுக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு கேட்டார்கள். அதனால், சும்மா கிடக்கிற இடத்தை வாடகைக்கு விட்டால் பணம் கிடைக்கும் என்று எனது இடத்தை டாஸ்மாக் கடைக்கு வாடகைக்குவிட சம்மதித்தேன்.
இதையடுத்து, ஊர் கட்டுப்பாட்டை மீறி டாஸ்மாக் கடைக்கு இடம் கொடுத்ததற்காக, என் குடும்பத்தையும், எனது அண்ணன் ராமராஜன், தம்பி சத்ய செல்வம், தங்கை பாப்பாத்தி ஆகிய நான்கு பேரின் குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால், நாங்கள் ஊரில் எந்தவித விஷேசத்துக்கோ, ஊரில் நடக்கும் இறப்பு காரியங்களுக்கோ கூட போக முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 3.11.13ல் சயமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். வழக்கை விசாரித்த்த இன்ஸ்பெக்டர், எங்களை சித்ரவதை செய்யும் ஊர்க்காரர்களான துரை, தர்மலிங்கம், பாண்டியன், ராஜா ஆகியோரை அழைத்து, இவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்ககூடாது என எழுதி வாங்கி கொண்டு அனுப்பினார்கள்.
அதன்பிறகு, ஊரில் டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என மதுரை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினார்கள். ஆனால், அதன்பிறகும் எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள். மிக கேவலாமாக பேசுகிறார்கள். அந்த ஊரில் வாழவே பயமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.ஆனந்தகுமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக