14 Jan 2014
புதுடெல்லி: நாட்டின் சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு வளர்ச்சியின் பலன் போதிய அளவில் கிடைக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.அனைத்து சிறுபான்மை மக்களையும் ஒரே பிரிவாக காணமுடியாது. சில பிரிவினர் மிகவும் முன்னேறியுள்ளனர். ஆனால், முஸ்லிம்களின் நிலைமாறுபட்டது
என்று அவர் கூறினார். டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தின் மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்றுப் பேசியதாவது: இந்தியா போன்ற பாரம்பரியம்மிக்க நாட்டில் மதச்சார்பற்ற தன்மையை வாழ்க்கையுடன் இணைத்து மக்கள் பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றனர். இதுதான் இந்தியாவின் பலமாக கருதப்படுகிறது.
ஆனால், சமுதாயத்தில் மதம்,மொழி, கலாசாரம் ஆகியவற்றில் நிலவி வரும் ஒற்றுமையை சீர்குலைக்க பிரிவினைவாதச் சக்திகள் முயன்று வருகின்றன. மேலும், மதச்சார்பற்ற தன்மையை மாற்றியமைக்கவும் அவை திட்டமிட்டு வருகின்றன. இதை நாட்டு மக்கள் அனுமதிக்கக் கூடாது. பெரும்பான்மை சமுதாயத்தினருக்கும் சிறுபான்மை சமுதாயத்தினருக்கும் இடையே உள்ள நல்லுறவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நாட்டின் பலபகுதிகளில் முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதனால் பாதிக்கப்படும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிறுபான்மை சமுதாயத்தினர் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி பெற கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி மேற்கொண்ட நடவடிக்கைகளால் கிடைக்கும் பலன் வெளிப்படையாக தெரிகிறது.
சமுதாயத்தில் பின்தங்கிய முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காக, சச்சார்குழு அளித்த 76 பரிந்துரைகளில் 72 பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுகொண்டுள்ளது. அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற பரிந்துரை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று பிரதமர் பேசினார்.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக