தேமுதிகவின் துணைத் தலைவரும், ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான பண்ருட்டி ராமசந்திரன், அரசியலில் இருந்து விலகி ஒய்வு பெற உள்ளதாக அறிவித்து தனது எம்.எல்.ஏ பதவியையும் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி ராமசந்திரன் திமுகவில் அறிஞர் அண்ணா காலத்தில் தமது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். அடுத்து கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராகவும், அதை அடுத்து அதிமுகவில் இணைந்து, எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தவர்.
விஜயகாந்த் தேமுதி கட்சி தொடங்கிய போது, அவரது கட்சியில் இணைந்தார். அந்த கட்சி சார்பாக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர்.
இன்று ஆலந்தூர் தொகுதி எம் எல் ஏ பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஒய்வு பெற விருப்புவதாக தெரிவித்துள்ளார்.
கூடவே, ஆலந்தூர் தொகுதி எம் எல் ஏ வாக மக்களுக்கு நலத் திட்டங்கள் எதுவும் செய்யாமல் பதவியில் நீடிப்பதில் விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். மக்களுக்கு தேமுதிகவின் மீது இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல் கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பதவி விலகல் குறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், "எனது உடல்நிலை சரியில்லை, மருத்துவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே, இன்று முதல் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறேன். அத்துடன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.
கடந்த 8 ஆண்டுளுக்கும் மேலாக தங்களுடன் இணைந்து பணியாற்றியபோது தாங்கள் காட்டிய அன்பு மற்றும் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சேரும்போது மகிழ்ச்சியும், பிரியும் போது வருத்தமும் ஏற்படுவது இயற்கை. எனக்கு வாக்களித்து என்னை தேர்வு செய்த ஆலந்தூர் மக்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.பண்ருட்டி தொகுதியிலிருந்து 6 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். கடைசியாக ஆலந்தூர் தொகுதியிலிருந்து வென்றார்.
இதனிடையே பண்ருட்டி ராமச்சந்திரனின் ராஜினாமாவை சபாநாயகர் தனபால் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேமுதிகவிலிருந்து பல அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வெளியே தனியாக செயற்படத் தொடங்கியிருந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரனின் பதவில் விலகல் தேமுதிகவுக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.
தேமுதிகவின் அதிருப்தி வேட்பாளர்களில் ஒருவரான மைக்கெல் ராயப்பன் எம்.எல்.ஏ, இது தொடர்பில் தெரிவிக்கையில், ராமச்சந்திரனுக்கு உரிய மரியாதையை அக்கட்சி கொடுக்கவில்லை. அரசியல் நாகரீகம் கருதி, அவர் வயதை குறிப்பிட்டு வெளியேறி உள்ளார் என்றார்.
எனினும் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், இது திடீர் முடிவு அல்ல. திட்டமிட்டது. ஏற்கனவே எனது உடல்நிலை குறித்து விஜயகாந்திடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் ராஜினாமா குறித்து சொல்லவில்லை. சொல்லியிருந்தால் அங்கிருந்து நிர்ப்பந்தம் வரும் எனத் தெரிவித்தார்.
மாற்று அணியாக தேமுதிக செயற்பட்டதா? கட்சி குறித்து உங்கள் கருத்து என்ன என நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. தற்போது மக்கள் நம்பிக்கை குறைந்துவிட்டது. இதற்கு காரணம் தலைமை தான் என தெரிவித்தார்.
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக