தமிழக முதல்வர் ஜெயலலிதா மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியை அதிகரித்து, தற்போது தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க உதவக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
கடந்த சில வாரங்களாகவே தலைநகர் சென்னையைத் தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில மணி நேர மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. ஒரே நேரத்தில் சில மின் உற்பத்தி நிலையங்களில் நிகழ்ந்த விபத்துக்களின் விளைவாய் அத்தகைய மின்வெட்டு எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று புதன் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் முதல்வர் ஜெயலலிதா மாநிலத்தில் இம்மாதம் எதிர்பாராத மின் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்.
தான் 2011ல் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற போது, சுமார் 4000 மெகாவாட் மின்சாரம் தட்டுப்பாட்டில் இருந்தும் தனது அரசின் பல்வேறு முயற்சிகளின் விளைவாய் மின் தட்டுப்பாடு கணிசமாகக் குறைக்கப்பட்டதாகக் கூறுகிறார் அவர்.
நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லாத நிலை இருந்ததாகவும் ஆனால், திடீரென. சில மின் உற்பத்தி அலகுகளில் பழுது ஏற்பட்டதாலும்,சென்னையில் ஒரு தீ விபத்தினாலும் ஒரே நேரத்தில் நிகழ்ந்த அச் சம்பவங்களால்,இப்போது கடும் மின் பற்றாக்குறை எற்படும் நிலை உருவாகியுள்ளது என்கிறார் முதல்வர்.
தமிழகத்துக்கு வரும் மின் பரிமாற்றத் தடங்களை அதிகரித்து, பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற வழி செய்யுமாறு தான் மத்திய அரசுக்கு முன்வைத்த கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படாமலே இருப்பதை சுட்டிக்காட்டும் முதல்வர், இப்போதாவது,இப்பிரச்னையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசு மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியினை உயர்த்தி, தமிழகம் இருளில் மூழ்கும் அபாயத்தில் இருந்து காக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு மின் துறைப் பொறியாளர்கள் சங்கத் தலைவர் சா.காந்தி, தமிழக அரசு தொடர்ந்து அரசு மின் நிலையங்களைப் பராமரிப்பதை அலட்சியப்படுத்தி, தனியார் நிறுவனங்களிடமிருந்தும், காற்றாலை நிறுவனங்களிடமிருந்தும்,மத்திய தொகுப்பிலிருந்தும் மின்சாரத்தை வாங்கி நிலைமையை சமாளிக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்து வந்ததே இதற்குக் காரணம் என்றார்.
மேலும் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் பல கட்டமைப்பு இணைப்பு வேலைகள் முடிக்கப்பட்டும், உற்பத்தி துவங்காமல் இருக்கின்றன, இதுவும் ஒரு பிரச்சினை என்றார் அவர்.
மேலும், மின் பாதைகள் அமைக்கப்படுவதிலும் தமிழகம் சரியாக செயல்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். சுமார் 3000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் கேரளத்துக்கு4000மெகாவாட்டுகள் தாங்குதிறன் கொண்ட மின்பாதை பவர் கிரிட் கார்ப்பரேஷனால் அமைக்கப்பட்டது, ஆனால் 12,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் தமிழகத்துக்கு வேண்டிய பலமான மின்பாதைகள் இல்லை என்றும் அவர் கூறுகிறார்
thamilan thanks
.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக