Nov 2013
வாஷிங்டன்: தங்கள் நாட்டில் இஸ்லாத்திற்குத் தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்று அமெரிக்காவில் உள்ள அங்கோலா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
.
வாஷிங்டனில் உள்ள அங்கோலா தூதரக செய்தித் தொடர்பாளர் பத்திரிகையார்களிடம் இவ்வாறு கூறினார்:
மத விவகாரங்களில் தலையிடாத நாடு அங்கோலா. எங்கள் நாட்டில் ஏராளமான மதங்கள் பின்பற்றப்படுகின்றன. மக்கள் தங்களுக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் உள்ளது.
எங்கள் நாட்டில் கத்தோலிக்கர்கள், ப்ராட்டஸ்டண்டுகள், பாப்டிஸ்டுகள், இஸ்லாமியர்கள் உள்ளனர். எங்கள் நாட்டில் இஸ்லாத்திற்குத் தடை விதிக்கப்படவில்லை. மசூதிகள் இடிக்கப்படவில்லை.
எங்களுக்கு இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. நாங்களும் உங்களைப் போன்று இணையதளம் வழியாகத்தான் இந்தச் செய்தியை அறிந்தோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இவர் தனது பெயரைக் கூற மறுத்துவிட்டார்.
அதேபோன்று, அமீரகத்திலுள்ள அங்கோலா தூதரகமும் இந்தச் செய்தியை மறுத்துள்ளதாக தஸ்பீஹ் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. தஸ்பீஹ் இணையதளம் இதுகுறித்து தூதரகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டதாகவும், அங்கிருந்த பெண் அதிகாரி, “ஏன் இப்படி செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன என்று தெரியவில்லை. தினமும் பல நூற்றுக்கணக்கான விசா விண்ணப்பங்கள் எங்களுக்கு வருகின்றன. அவற்றில் அதிகமானவர்கள் முஸ்லிம்களே. அவர்களுக்கு நாம் எவ்வித மறுப்புமின்றி விசா வழங்குகின்றோம்” என்று கூறியதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
அங்கோலா குறித்த செய்தி அனைத்து செய்தி ஊடகங்களிலும் நேற்று வெளிவந்தது. அதில் அங்கோலாவின் அதிபரும், கலாச்சாரத்துறை அமைச்சரும் கூறியதாகவே, அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டே செய்திகள் வந்திருந்தன. அங்கோலாவின் அனைத்துப் பத்திரிகைகளிலும் இது வெளியாகியுள்ளன. அவற்றின் அடிப்படையில்தான் நேற்று உலகம் முழுவதும் அனைத்து செய்தி ஊடகங்களிலும் இந்தச் செய்தி வெளியானது.
ஆனால் அமெரிக்காவின் அங்கோலா தூதர் இதனை மறுத்துள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அங்கோலா அதிபரிடமிருந்தோ, அதன் கலாச்சாரத்துறை அமைச்சரிடமிருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மறுப்பாக வெளிவரவில்லை.
அங்கோலாவிலிருக்கும் தூதுவின் வாசகர் அங்கோலாவிலிருந்து நமக்கு அனுப்பிய செய்தியில், “மஸ்ஜிதில் தொழுகைக்கான அழைப்பான பாங்கு சொல்லப்படுகிறது. இப்பொழுது கூட அஸ்ரு பாங்கு சொல்கிறார்கள். லுவாண்டாவிலுள்ள மஸ்ஜிதுகள் மூடப்பட்டதாகத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.
ஆதலால் உண்மை நிலவரம் என்னவென்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக