வாஷிங்டன்: இந்தியாவில் 60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்துவதாக உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உலகெங்கும் கழிப்பறை பற்றாக்குறையின் விளைவாய் எழும் சிக்கல்களை அனைவரும் அறியச் செய்ய வேண்டி ஐக்கிய நாடுகள் பேரவை நவம்பர் 19ஆம் நாளை முதல் முறையாக உலகக் கழிப்பறை நாளாக அறிவித்திருக்கிறது.
இந்த தினத்தையொட்டி உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தியாவிலுள்ள கழிப்பறை பிரச்னை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கும் மேற்பட்ட மக்கள் திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
திறந்தவெளிக் கழிப்பிடங்களின் காரணமாக எழும் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கப்பால் கற்கும் திறன் உருவாவதிலும் கழிப்பிடத்தன்மை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் தனது முதல் வயதில் தூய்மையான கழிப்பிட வசதியைப் பெற்ற குழந்தைகள் தங்களது ஆறாவது வயதில் எழுத்துகளையும், எண்களையும் எளிதில் இனம் காணும் ஆற்றலைப் பெற்றுள்ளது தெரிய வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இந்தியாவில் கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு முழுமையான கழிப்பிட வசதிகளைப் பெற வழி வகுப்பதன் மூலம் அவர்களது புரிதல் திறனை வெகுவாக மேம்படுத்த முடியும் என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
தாராளமயமாக்கலின் பின்னணியில், கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வந்திருக்கிறது. காணுமிடந்தோறும் கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களும் பிரம்மாண்ட வணிக வளாகங்களும் என்று சொல்லப்பட்டாலும், ஏழ்மை இன்னமும் பல பகுதிகளில் தலைவிரித்தாடவே செய்கிறது என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
தமிழ்நாட்டிலுள்ள 60 சதவீத வீடுகளில் கழிப்பிட வசதியில்லை என்றும், கிராமப்புறங்களில் அது 75 சதமாக உள்ளது என்றும் இது குறித்த ஆய்வுகளை நடத்திய ‘டிரான்ஸ்பேரண்ட் சென்னை’ (Transparent Chennai) எனும் தன்னார்வக் குழு கூறுகிறது.
இந்தியாவில் கழிவு நீரை வெளியேற்றும் வசதிகள் சரியான முறையில் உருவாக்கபப்டாததே இதற்கு முக்கிய காரணம் என்று அந்த அமைப்பைச் சேர்ந்த ப்ரீத்தி நாராயணன் பிபிசியிடம் தெரிவித்தார்.
இப்பிரச்னையை தீர்க்க மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் உரிய பலனளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சென்னையில் 65 லட்சம் மக்கள் வசித்தாலும் மாநகரில் ஆயிரத்துக்கும் குறைவான பொது கழிப்பறைகளே உள்ளன எனவும் அதுவும் உள்ளூர் வாழ் ஏழை மக்களுக்கு பயன்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது உலக அளவில் 250 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக