அலிகர்: முஸஃபர்நகர் கலவரத்தின் பின்னணியில் அரசியல் சக்திகள் இருந்ததாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முஸஃபர்நகர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் அண்மையில் சங்க் பரிவார பாசிஸ்டுகளின் உதவியுடன் ஜாட் இனத்தவர்கள் நடத்திய முஸ்லிம்களுக்கு எதிரானத வகுப்புக் கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளானார்கள். ஏராளமானோரை காணவில்லை.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் ஆதாயம் பெறவே இந்தக் கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பா.ஜ.க.வின் மீது பலத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுபோலவே கலவரத்தை உ.பி.யில் ஆளும் சமாஜ்வாதி கட்சி தடுக்க தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அலிகரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார். அவரது பேச்சு விவரம்:
முஸஃபர்நகர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் அண்மையில் நடந்த வகுப்புக் கலவரத்தின் பின்னணியில் அரசியல் சக்திகள் செயல்பட்டன. இந்த சக்திகள் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக மக்களை மோத விட்டு வேடிக்கை பார்த்துள்ளன. இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என அவர்கள் கருதுகிறார்கள்.
இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வகையில் தூண்டப்பட்டிருக்கிறார்கள். ஒரு சாதியினரும் மற்றொரு சாதியினரும் சண்டையிட்டுக் கொள்ளும் விதத்தில் அவர்களைத் தூண்டி விட்டு அரசியல்வாதிகள் செயல்பட்டிருக்கிறார்கள்.
சாதாரணமாக, மக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ள விரும்ப மாட்டார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் தங்களால் வெற்றி பெற முடியாது என்று அரசியல் சக்திகள் கருதுகின்றன. அதனாலேயே இந்துக்களும், முஸ்லிம்களும் மோதிக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விருப்பப்பட்டு, அதை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.
மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்காத வரையில் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படாது. மாநிலம் வளர்ச்சி பெற காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். உங்கள் உரிமைகளுக்காக நாங்கள் போராடுவோம்.
மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் காங்கிரஸ் மட்டுமே அனைத்து மதத்தினரையும் சமூகத்தினரையும் அரவணைத்துச் சென்று மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்குப் பாடுபடும்.
மாநிலத்தில் கட்டாய நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக 2011இல் நடைபெற்ற பாத யாத்திரையில் நான் பங்கேற்றேன். அப்போது இது தொடர்பாக நான் வாக்குறுதி அளித்தேன். அதன்படி தற்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, நிலம் கையகப்படுத்துதல் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முன்வரவில்லை. எனவே மக்கள் தங்களுக்கான உரிமையை வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.
காங்கிரஸ் கட்சி எப்போதுமே மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறது. மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகிய விஷயங்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்றார் ராகுல் காந்தி.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக