ராமநாதபுரம்
First Published : 10 October 2013
ஒரு நபரிடம் இரு வாக்காளர் அடையாள அட்டை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளர் ஜெ.சந்திரகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது .அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக ஜி.முனியசாமி (அதிமுக மாவட்ட செயலாளர்), அகமது தம்பி (திமுக மாவட்ட துணை செயலாளர்), சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர்), ஆ.ரவிச்சந்திர ராமவன்னி(காங்கிரஸ்), திலீப்குமார்(தேமுதிக), அன்பு பகுருதீன்(தேசியவாத காங்கிரஸ்) உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளர் ஜெ.சந்திரகுமார் பேசியது: வரும் 1.1.2014 அன்று தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 9.82லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள்.4,94,300.பெண் வாக்காளர்கள் 4,87,645. இவர்களைத் தவிர இதர வாக்காளர்களாக 55 பேரும் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கவும்,சேர்க்கவும்,திருத்தம் செய்யும் பணி 1.10.2013முதல் 31.10.2013வரை நடைபெறவுள்ளது. 1.1.2014 அன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
இது தவிர ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து இறந்தவர்கள்,வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்கள் பெயர்களை நீக்கம் செய்தும் கொள்ளலாம். இதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் வாக்காளர் வரைவுப் பட்டியல் பிரதிகளாகவும், குறுந்தகடுகளாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனைக் கொண்டு அந்தந்த அரசியல் கட்சிகள் தங்கள் பகுதிகளில் சேர்க்க- நீக்க வேண்டிய பணிகளை மேற்கொள்ளலாம்.
எந்த ஒரு நபரிடமும் இரு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு மையங்களில் அதிகப்படியான அளவுக்கு பெயர் சேர்த்தல், நீக்கல் படிவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. இம்மாதம் 20,27 ஆகிய நாட்களில் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவியர் அருகிலுள்ள மையங்களுக்கு சென்று வாக்காளர்களாக சேர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 701 இடங்களில் 1225 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை 1050 வாக்குச்சாவடிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன. இந்த
ஆண்டு கூடுதலாக 175 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெண் வாக்குச்சாவடிகளாக மாற்ற வேண்டிய பகுதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
dinamani thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக