தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஆயுதக் கப்பலுக்கு சட்டவிரோதமாக எரிபொருள் நிரப்புவதற்கு உதவி செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் ஒரு ஷிப்பிங் ஏஜன்சியில் பணி புரியும் ஐந்து நபர்களை கைது செய்துள்ளதாக க்யூ பிரிவு அதிகாரி எம். துரை கூறினார்.
அதில் ஒருவர் மலையாளி என்றும், அவர்தான் டீசல் வாங்குவதற்கு பணம் கொடுத்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொச்சியைச் சார்ந்த சாக்கோ தாமஸ் என்பவர்தான் கப்பலில் டீசல் நிரப்புவதற்கு பணம் கொடுத்தவர்.
கைதான ஐந்து பேர்களில் மரியன் ஆண்டனி விஜய் என்பவரை விசாரிக்கும்பொழுது இந்தத் தகவல் கிடைத்தது. சாக்கோ தாமஸ் குறித்து க்யூ பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இன்றோ நாளையோ இவரைக் குறித்து விசாரிக்க க்யூ பிரிவு போலீசார் கொச்சி செல்கின்றனர்.
என்.ஐ.ஏ. விசாரணை
இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.க்கு கை மாறும் என்று கூறப்படுகிறது. மாநில விசாரணை எல்லைக்கு வெளியே நிறைய விஷயங்கள் குறித்து விசாரிக்க வேண்டி இருப்பதால் இது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
கேப்டன் தற்கொலை முயற்சி
இதற்கிடையே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கப்பலின் கேப்டனும், ஒரு பொறியாளரும் கடந்த சனிக்கிழமை தற்கொலைக்கு முயற்சித்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
கடந்த வாரம் சீமன் கார்ட் ஓஹாயோ என்ற அமெரிக்க கப்பலை தமிழ்நாடு போலீஸ் கைப்பற்றியது.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
தமிழ்நாடு க்யூ பிரிவு எஸ்.பி. தலைமையில் போலீசார் கப்பலிலிருந்து 35 ஏகே 47 துப்பாக்கிகளும், 6,500 ரவைகளும் கைப்பற்றினர். கப்பலில் இருந்த இந்தியர்கள் உட்பட 35 பேரை போலீசார் காவலில் எடுத்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக