முஸாஃபர் நகர்: உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் பைக் மோதலில் உருவான சாதாரண தகராறை வகுப்புவாத வெறியர்கள் ஊதிப் பெருக்கி கலவரத்தை ஏற்படுத்தினர். இதில் முஸ்லிம்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
இக்கலவரம் முஸாஃபர்நகரின் அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலவரத்தால் பீதியடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்கள் அரசு அமைத்துள்ள தாற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினரும், போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸாஃபர்நகருக்கு பிரதமர் மன்மோகன் சிங் திங்கள்கிழமை வருகை புரிந்தார். இந்த மாவட்டத்தில் உள்ள பஸ்ஸி கலான் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக முகாமை அவர் பார்வையிட்டார்.
அந்த முகாமில், வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதமருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் முகாமைப் பார்வையிட்டனர்.
இதேபோல், ஜாட் பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கும் பவாலி, காஞ்ச்புரா கிராமங்களுக்கும் அவர்கள் சென்றனர். அங்கு மத மோதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தலைவர்கள் ஆறுதல் கூறினர்.
அப்போது பிரதமர், “உங்களுடைய வேதனையைப் பகிர்ந்து கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன்” என்று தெரிவித்தார். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியது: கடந்த வாரம் நிகழ்ந்த கலவரங்கள் மிகப் பெரிய சம்பவமாகும். இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். இங்குள்ள நிலைமையை நேரில் மதிப்பிடவே வந்துள்ளேன். வன்முறை காரணமாக இடம் பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் அவர்களின் வீடுகளுக்குத் திருப்பி அனுப்புவதே எங்களின் முன்னுரிமையாகும். தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் உணர்வதை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் பிரதமர்.
அதன் பின், ஜாட் பிரிவு மக்கள் வசிக்கும் மேலும் பல பகுதிகளுக்கும் பிரதமரும் மற்ற தலைவர்களும் சென்றனர். அங்கு அவர்களிடம், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயல்திறனற்று இருப்பதாகவும், பாதுகாப்பற்ற நிலையை உணர்வதாகவும் மக்கள் மனக்குறையை வெளியிட்டனர்.
முன்னதாக, தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுடன் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கலந்துரையாடினர். சோனியா அங்கிருந்த பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மீறி, பெண்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.
குத்பி கிராமத்தைச் சேர்ந்த, கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜமீல் பாஸி என்ற 42 வயது நபர், பிரதமரிடம் பேசும்போது, “வன்முறையால் இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர்கள் கருதுவதே இதற்குக் காரணம்” என்று தெரிவித்தார்.
அப்போது அவர் கண் கலங்கினார். பிரதமர் அவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ஜமீல் பாஸி, செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்களுக்கு அனைத்து உதவிகளையும், மாநில அரசும் மத்திய அரசும் செய்யும் என்று பிரதமர் தெரிவித்தார்” என்றார்.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக