இஸ்லாமாபாத், செப். 25–
பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில் நேற்று மாலை 4.30 மணிக்கு திடீரென பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி இருந்த அந்த நில நடுக்கத்தால் தென்மேற்கு மாகாணம் முழுவதும் குலுங்கியது. அதன் தாக்கம் டெல்லி வரை உணரப்பட்டது.
பலுசிஸ்தான் மாகாணத்தை புரட்டிப் போட்ட இந்த நில நடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்தன. அடுக்குமாடி கட்டிடங்கள் நொறுங்கின. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 217 பேர் வரை பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
600–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அவரன் மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவரன், துர்பத் ஆகிய 2 மாவட்டங்களில்தான் அதிகபட்ச பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கணக்கானவர்கள் வீடு இழந்து தவிக்கிறார்கள். அங்கு சுமார் 300 ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல இடங்களுக்கு இன்னமும் மீட்புக்குழுவினர் சென்று சேரவில்லை. எனவே சாவு எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சாலை வசதிகள் சரியாக இல்லாததால், படுகாயம் அடைந்த பலர் ஹெலிகாப்டர்கள் மூலம் மற்ற நகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதை கருத்தில் கொண்டு இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பயங்கர நில நடுக்கத்தை தொடர்ந்து இன்று காலை வரை சிறு, சிறு அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாண மக்களிடையே கடும் பீதியும், பதற்றமும் நீடிக்கிறது.
குறிப்பாக ஜாபர்பாத், நாஸ்கி, கலட், வின்தர், நசீர்பாத், பஞ்குர், மஸ்துங் ஆகிய ஊர்களில் மக்கள் வீடுகளுக்கு செல்ல பயந்து தெருக்களில் உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிக அதிர்வு கராச்சியில்தான் உணரப்பட்டது. இதனால் கராச்சியில் மக்கள் வீடுகளில் இருந்து அலறியபடி வெளியில் ஓடி வந்தனர். நேற்றிரவு அவர்கள் வீடு திரும்ப பயந்து தெருக்களில் தூங்கினார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் கராச்சி பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 40 பேர் பலியானார்கள். ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன.
பாகிஸ்தான் – காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த 2005–ம் ஆண்டு 7.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் சுமார் 75 ஆயிரம் பேர் பலியானார்கள்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியை பூகம்பம் உலுக்கிய வேகத்தில் கடலில் புதிய குட்டித்தீவு ஒன்று தோன்றி உள்ளது. பாகிஸ்தானின் ஜிவடர் கடலோரப் பகுதியில் இந்த தீவு உருவாகி இருக்கிறது.
சுமார் 60 மீட்டர் நீள அகலத்தில் தோன்றியுள்ள இந்த தீவின் மணல் பகுதி சுமார் 30 மீட்டர் உயரத்துக்கு உயர்ந்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் இது போன்ற தீவு உருவாகி இருந்தது.
நாளடைவில் அந்த தீவு கடலில் கரைந்து காணாமல் போய்விட்டது. தற்போது பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் புதிய குட்டித்தீவு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கடலோரத்தில் திரண்டு அந்த புதிய குட்டித் தீவை பார்த்தனர்.
maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக