بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ரமழானின் சிறப்புகள்
ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.
அருள் வாயில்கள் திறக்கப்படும் மாதம்
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்கள்: புஹாரீ(1899), முஸ்லீம்(1957) மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.
நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பு.
“ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். முஸ்லீம் (2119) இது நோன்புக்கே உள்ள தனிச் சிறப்பாகும்.
நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரத்தில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமை மிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி
எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி (ரழி) நூல் : பைஹகி
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ◊ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ◊ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
நிச்சயமாக நாம் குர்ஆனை கண்ணியமிக்க லைலத்துல் கத்ர் என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அல்குர்ஆன் 972:1-3
ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் மேலும் இம்மாதம் சிறப்பும், கண்ணியமும் மிக்க மாதமாகிறது.
லைலத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட, இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
நோன்பாளிகளுக்கு சுவர்க்கத்தில் தனிவாசல்
மறுமை நாளில் சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது. நூல்: புஹாரீ (1896), முஸ்-ம் (2121)
அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவணக்கம்
“நோன்பு நரகத்தி-ருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புஹாரீ (1904)
கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்
ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.
யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரீ, முஸ்லிம்
எனவே சிறப்பும், கண்ணியமும் மிக்க இந்த ரமழான் மாதத்தை அடைந்து நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நல் அமல்கள் செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக! அமீன்! அமீன்! யாரப்பல் ஆலமின்.
azeezahmed thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக