கருத்தடை அறுவை சிகிச்சைக்கு நூறு சதவிகிதம் உத்தரவாதம் இல்லை' என்றால், அதைச் செய்துகொள்வதால் என்ன பலன்?
பெருங்களத்தூர் அபர்ணாவின் கதையைக் கேட்டால்... அனைவருக்குமே இந்தக் கேள்விதான் எட்டிப் பார்க்கும்!
கடந்த 2003-ம் ஆண்டு, சென்னை, இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார் அபர்ணா. அவருக்கு 2009-ம் ஆண்டு கரு உருவாக, தனியார் மருத்துவமனைக்குச் சென்று கருவை கலைத்தவர், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 'நஷ்டஈடு வழங்க வேண்டும்' என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ... மேல்முறையீடு செய்தது. அப்போது, 'கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட அனைவருமே எதிர்காலத்தில் கர்ப்பம் தரிக்க மாட்டார்கள் என்று நூறு சதவிகிதம் உத்தரவாதம் தர முடியாது’ என்று மருத்துவமனை தரப்பு எடுத்து வைத்த வாதத்தை வழிமொழிந்த மாநில நுகர்வோர் நீதிமன்றம், 'நஷ்டஈடு தரத் தேவையில்லை' என்று கூறிவிட்டது!
மனதில் எழுந்த சந்தேகங்கள் பலவற்றுடன், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணனிடம் பேசினோம்.
''மருத்துவத்தில் எப்போதுமே 100 சதவிகித உத்தரவாதம் என்பது கிடையாது. அது கருத்தடை அறுவை சிகிச்சைக்கும் பொருந்தும். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் லட்சம் பெண்களில், நாலு பேருக்கு ஃபெயிலியர் ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு அரசாங்கம் இலவசமாக மறுமுறை கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்ய முன்வருகிறது. ஆனால், இந்த நாலு ஃபெயிலியருக்காக, 99,996 பேர் கருத்தடை செய்ய யோசித்தால்... அது முட்டாள்தனம் இல்லையா..?'' என்று கேள்வி எழுப்பிய டாக்டர், முதலில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும் முறையை விளக்கினார்.
சினைக்குழாய்களை வெட்டினால்... ஆபத்து!
''சினைப்பையில் இருந்து வெளியே வருகிற கருமுட்டை, சினைக்குழாய் மூலமாக கர்ப்பப்பைக்குள் வருகிறது. வலது, இடது பக்கங்களில் உள்ள இந்த சினைக்குழாய் பாதையை அடைப்பதுதான் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை. சினைக்குழாய் என்பது 10 செ.மீ. நீளம் இருக்கும். குழாயின் கடைசியில் இருந்து 3 செ.மீ விட்டுவிட்டு, அதற்கு மேல் உள்ள சினைக்குழாயை 2 செ.மீ அளவு வெட்டி, தைத்துவிடுவார்கள். இதுவே, லேப்ராஸ்கோபி சிகிச்சையில் 2 செ.மீ சினைக்குழாயை வெட்டுவதற்குப் பதிலாக, சினைக்குழாயின் நடுவில் 'ரிங் அப்ளிகேஷன்’ என்கிற முறையில் வளையத்தைப் பொருத்துவார்கள். இதனால், கர்ப்பப்பைக்குள் சினைமுட்டை வராது... விந்துவையும் சந்திக்க முடியாது... கருவும் உருவாகாது.
ஒருவேளை இரண்டு சினைக்குழாய்களையும் முழுவதுமாக வெட்டிவிட்டால், 100 சதவிகிதம் கருத்தடைக்கு உத்தரவாதம் தரலாம். ஆனால், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் அதிகம். கர்ப்பப்பைக்கும், சினைப்பைக்கும் போகிற ரத்த ஓட்டம் மாறுபடும். அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படலாம் அல்லது மாதவிடாயின்போது தாங்க முடியாத வலி ஏற்படலாம். சிலருக்கு மாதவிடாய் சட்டென்று நின்று மெனோபாஸ் நிலைக்கு போய்விடும்... சிலருக்கு மாதவிடாய் விட்டுவிட்டு வரும். இதற்கெல்லாம் 50 சதவிகித வாய்ப்புகள் உண்டு என்பதால்தான், சினைக்குழாயை முழுதாக வெட்டி எடுப்பதில்லை'' என்று புரிய வைத்த டாக்டர், கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வியுறுவதற்கான காரணங்களைப் பேசினார்.
தையல் சரியில்லை என்றால்... சிக்கல்தான்!
''கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பெண்களில், 80% பேருக்கு அந்த இடத்தில் ஏதும் பிரச்னை இல்லாமல்தான் இருக்கும். விந்துவின் அளவு என்பது 5 மைக்ரான்கள். முட்டையின் அளவு 100 மைக்ரான்கள். இயற்கையின் விளையாட்டுகள் இங்கேயும் நடக்கிறது. சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சின்ன துளை அல்லது ஜவ்வு உருவாகிவிடும். ஒரு மில்லி மீட்டரில் பத்தில் ஒரு பங்கு அளவுள்ள ஓட்டையை அது உருவாக்கிவிடும். இதன் வழியாக முட்டை சென்றால், கர்ப்பம் ஏற்பட்டுவிடும். இந்த வகையில் கர்ப்பத்தடை ஆபரேஷன் ஃபெயிலியர் ஆகலாம்.
அறுவை சிகிச்சை செய்த இடத்தில் முழுமையாக தையல் போடாமல் எங்கேயாவது ஒரு சின்ன இடைவெளி விட்டிருப்பார்கள். அது விந்து உள்ளே நுழைந்து, மீண்டும் கருத்தரிக்க காரணமாகிவிடும். இதற்கு டாக்டர்களே பொறுப்பு. இந்த வகையிலும் ஃபெயிலியர் ஆவதுண்டு. லேப்ராஸ்கோபி முறையில் கருத்தடை செய்யும்போது சினைக்குழாயில் வளையத்தை பொருத்துவதற்குப் பதிலாக, பக்கத்தில் உள்ள 'உருண்டை சதை' என்கிற இடத்தில் தவறுதலாக வளையத்தை பொருத்திவிடுவார்கள். இதுபோல, மருத்துவர்களின் தவறினால் மீண்டும் கர்ப்பமுற்றால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற காரணங்கள் என்றால், மருத்துவர்களைப் பொறுப்பாக்க முடியாது'' என்று நம் சந்தேகங்கள் அனைத்துக்கும் அழகாக விளக்கங்கள் தந்து அனுப்பி வைத்தார் ஜெயம் கண்ணன்!
thedipaar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக