ஏராளமான தலிபான்கள் போலீஸ் சீருடையில் ஆயுதங்களுடன் வந்து இன்று அதிகாலை (30.07) பாகிஸ்தான் சிறை ஒன்றின்மீது தாக்குதல் நடத்தி, 300 கைதிகளை விடுவித்துள்ளனர். தாக்குதலுக்கு வந்த தலிபான்கள் எந்திரத் துப்பாக்கிகள், கிரானேட் லாஞ்சர்கள், மற்றும் வெடிகுண்டுகளுடன் வந்ததாகவும், அவர்களில் சிலர் தற்கொலை தாக்குதலுக்கு தயாராக வந்ததாகவும் தெரியவருகிறது.
ஆனால், இந்தத் தாக்குதலில் தலிபான்கள் யாரும் கொல்லப்படவில்லை. 6 போலீஸார் கொல்லப்பட்டனர். அத்துடன், சிறையில் இருந்த 6 ஷியா இன கைதிகளையும், இரு பொதுமக்களையும் கொன்றுவிட்டு சென்றுள்ளனர் தலிபான்கள். 15 போலீஸார் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் போலீஸ் செய்தித் தொடர்பாளர் சௌகாத் யூசஃப்சாய், “இந்த சிறை உடைப்பு தாக்குதலில், சுமார் 300 கைதிகள் வரை தப்பிச் சென்றிருக்கலாம். அதில் 25 பேர், தலிபான் இயக்கத்தை சேர்ந்த மிகப் பயங்கரமான தீவிரவாதிகள்” என்று கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்திய தலிபான்கள் கைதிகளை தப்பியோடும்படி கூறிவிட்டு, கைதிகளாக இருந்த தமது ஆட்களை மட்டும் அழைத்துச் சென்றுள்ளனர். பாகிஸ்தானின் தெரா இஸ்மாயில் கான் நகரில் உள்ள சிறைச்சாலை மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் இந்தச் சிறைச்சாலைப் பகுதிக்கு கார்களிலும், மோட்டார் பைக்களிலும் வந்து சேர்ந்தனர். இவர்கள் போலீஸ் சீருடையில் இருந்ததாக கூறியுள்ள சிறைக் காவலர் ஒருவர், தாக்குதலுக்கு வந்த தலிபான்களின் எண்ணிக்கை சுமார் 70 வரை இருக்கலாம் என்றார்.
(ஆனால், இன்று காலை இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தலிபான் செய்தித் தொடர்பாளர், தமது ஆட்கள் 150 பேர் தாக்குதலுக்காக சென்றிருந்தனர்” என்றார்.) அதிகாலையில் சிறைச்சாலையை சென்றடைந்த தலிபான்கள், முதலில் பெரிய சத்தத்துடன் ஒரு வெடிகுண்டை வெடிக்க வைத்தனர். அதையடுத்து, சிறைச்சாலையின் வெளி சுவர்கள் அருகே தலிபான்கள் வீரியம் மிக்க வெடிகுண்டுகளை வெடிக்க வைத்ததை அடுத்து, அந்த சுவர்கள் இடிந்து விழுந்தன. இதன் மூலம் உள்ளே சென்ற ஒரு செட் தலிபான்கள், சிறை பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இடிந்த சுவர் ஊடாக மற்றொரு செட் தலிபான்கள் உள்ளே வந்தனர். இவர்கள், தலிபான் கொடி பறக்கவிடப்பட்ட 8 மோட்டார் பைக்குகளில் சிறைச்சாலை காம்பவுண்டுக்குள் வந்தனர். இவர்களது கைகளில் மெகாபோன் ஒலிபெருக்கி கருவிகள் இருந்தன. அதன் மூலம் தாம் தேடிவந்த சக தலிபான்களின் பெயர்களை சொல்லி அழைத்தனர். அவர்கள் சிறை வைக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுகொண்டு, அவற்றை உடைத்து தமது ஆட்களை ஒன்று சேர்த்தனர். பின்னர், கைதிகளாக இருந்த தமது ஆட்களை வெளியே இருந்த கார்களில் ஏற்றி அனுப்பினர்.
சிறைச்சாலை காம்பவுண்டுக்குள் இன்று அதிகாலை முழுவதும் துப்பாக்கியால் சுடும் சத்தங்களும், குண்டு வெடிப்பு சத்தங்களும் கேட்டுக்கொண்டு இருந்தன. தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்தில், தெரா இஸ்மாயில் கான் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக இன்று காலை கருத்து தெரிவித்துள்ள தலிபான் செய்தித் தொடர்பாளர் ஷாகிதுல்லா, தாக்குதலுக்கு சென்ற எமது 150 போராளிகளில், 8 பேர் மனித வெடிகுண்டுகளாக வெடிக்க தயாராக உடலில் வெடிகுண்டுகளை கட்டி சென்றனர்.
இவர்களில் 2 பேர், தமது உடலில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து மரணமடைந்தனர். மீதி 6 பேர், தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை” என்றார்!
News : Source
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக