அமெரிக்க உளவுத்துறை NSA (National Security Agency) லட்சக்கணக்கான மக்களின் தொலைபேசி உரையாடல்கள், இன்டர்நெட் டேட்டாக்களை உளவு பார்க்கிறது என்ற செய்தி, கடந்த வாரம் பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி கார்டியன் மற்றும் அமெரிக்க நாளிதழ் வாஷிங்டன் போஸ்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “உளவுத்துறை உளவு பார்ப்பதற்கான ஆதாரம் எம்மிடம் உள்ளது”
என்றே இரு பத்திரிகைகளும் குறிப்பிட்டிருந்தன. இதையடுத்து, இந்த விவகாரம் பெரிதாகி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, “நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதியும், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என ஒப்புக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இது ஒருபுறம் அமெரிக்காவுக்கு சிக்கலாகிக் கொண்டிருக்க, மறுபுறம் உளவுத்துறை வட்டாரங்கள் பரபரப்பாக செயல்பட்டன.
“இந்த ரகசியத்தை பத்திரிகைகளுக்கு கசிய விட்டது யார்?” என்பதே அவர்கள் தேடியது! வெளிநாட்டு உளவுத்துறை ஒன்று தமக்கு கிடைத்த தகவலை கசிய விட்டு, ஆதாரங்களையும் கொடுத்ததா? அல்லது, அமெரிக்க உளவுத்துறை NSAவின் உயரதிகாரி யாராவது விஷயத்தை கசிய விட்டாரா? என்றெல்லாம் பலத்த தேடல்கள். அதே நேரத்தில், இவர்கள் அனைவரும் தேடிக்கொண்டிருந்த நபர், ஹாங்காங் ஹோட்டல் ரூம் ஒன்றில் தங்கியிருந்தார். தகவல் எப்படி, யார் மூலம் கசிந்தது என்பதை அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. ஓரளவுக்கு பிடித்து விட்டது என்பது, ஹாங்காங்கில் தங்கியிருந்த நபருக்கு தெரிந்துவிட்டது.
அடுத்து சி.ஐ.ஏ. என்ன செய்யும் என்பதையும் அவர் தெரிந்து வைத்திருந்தார். ‘ஓசைப்படாமல் ஆளை தூக்குவது’ என்பதே அது! அதையடுத்து அவர் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். தாம் தகவல் கொடுத்த கார்டியன் பத்திரிகையை தொடர்பு கொண்டு, தமது அடையாளத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அதாவது, இவர்தான் அந்த நபர் என்று தெரிந்தபின், அவருக்கு ‘ஏதாவது நடந்தால்’ அமெரிக்க உளவுத்துறை ‘ஆளை தூக்கிவிட்டது’ என்பது வெளி உலகத்துக்கு தெரிய வந்துவிடும். அதனால், அமெரிக்க உளவுத்துறை தம்மீது கை வைக்க துணியாது என்ற நினைப்பு காரணமாகவே தமது அடையாளத்தை வெளிப்படுத்த சொன்னார் அவர்.
ஹாங்காங் ஹோட்டலில் தங்கியிருந்த அவரின் பெயர், எட்வர்ட் ஸ்னோடன். 29 வயது அமெரிக்கரான இவர், இதற்கு முன் சி.ஐ.ஏ.விலும் டெக்னிகல் அசிஸ்டென்ட்டாக பணிபுரிந்துள்ளார். அதன்பின், உளவுத்துறை NSAவின் சில வேலைகளை செய்து கொடுக்கும் கான்ட்ராக்ட் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்திருக்கிறார். அந்த நிறுவனம் மூலம், NSAவில் பணிபுரிந்தபோது கிடைத்த தகவல்கள் மூலமே, அவர்கள் லட்சக்கணக்கான மக்களின் தொலைபேசி உரையாடல்கள், இன்டர்நெட் டேட்டாக்களை உளவு பார்க்கிறார்கள் என்ற ரகசியத்தை தெரிந்து கொண்டார்.
அதற்கான ஆதாரங்களை திரட்டியிருக்கிறார். இவர் பணிபுரிந்தது, அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள NSA அலுவலகத்தில். ஹவாயில் வசதியாக வாழ்ந்திருக்கிறார். வருட சம்பளம், 2 லட்சம் டாலர்கள். காதலி ஒருவரும் உள்ளார். தகவல்கள் திரட்டியதும், திடீரென ஒருநாள் இவை அனைத்தையும் உதறிவிட்டு கிளம்ப முடிவு செய்தார். தனது மேலதிகாரியை சந்தித்த எட்வர்ட், தமக்கு உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ளதால், சில வாரங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறி லீவு பெற்றிருக்கிறார். இதனால், யாருக்கும் சந்தேகம் எழவில்லை.
அவர், ஹவாயில் இருந்து கிளம்பி ஹாங்காங் சென்று இறங்கினார். அமெரிக்க பிரஜையான அவருக்கு, 90 நாள் தங்கியிருக்க விசா கொடுத்தார்கள் ஹாங்காங் இமிகிரேஷன் அதிகாரிகள். ஹாங்காங் ஹோட்டலில் தங்கிய அவர், கார்டியன், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளை தொடர்புகொண்டு, தம்மிடம் உள்ள ரகசியம் பற்றி தெரிவிக்க, இரு பத்திரிகைகளும் தமது புலனாய்வு பத்திரிகையாளர்களை ஹாங்காங் அனுப்பி வைத்தன. கார்டியன், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகள் அனுப்பி வைத்த புலனாய்வு பத்திரிகையாளர்கள் இருவருமே, இப்படியான ரகசியங்களை வெளியே கொண்டுவருவதில் கில்லாடிகள்.
ஒருவரது பெயர், கிளென் கிரீன்வால்ட், மற்றையவர், ஈவன் மேக்ஆஸ்கில். எட்வார்ட் கொடுத்த ஆதாரங்களை பரிசோதித்துப் பார்த்த அவர்கள், அதில் உண்மை இருப்பதை தெரிந்து கொண்டார்கள். அத்துடன் மேலதிகமாக வேறு சில தகவல்களையும் திரட்டினார்கள். அதையடுத்து, ஒரே தினத்தில் இரு பத்திரிகைகளிலும் இந்த பரபரப்பு கட்டுரை வெளியானது. அமெரிக்கர்கள் அதிர்ச்சியடைந்தார்கள், உளவுத்துறை வட்டாரங்கள் பரபரப்படைந்தன. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார். லட்சக்கணக்கான ஆட்களின் ஆன்லைன் உரையாடல்கள், தொடர்புகளை NSA உளவு பார்த்ததில் தமக்கு ஏதும் தெரியாது என்று கூகுள், பேஸ்புக் நிறுவனங்களின் தலைவர்கள், அறிக்கை வெளியிட்டார்கள்.
ஆனால், எட்வார்ட் கொடுத்த ஆதாரங்கள் ‘சாலிட்’ ஆக இருந்தன. இமெயில்கள் மாத்திரமல்ல, ஆன்லைன் சாட்டிங்குகள், ஆன்லைன் உரையாடல்கள் அனைத்தும் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளதற்கு எட்வார்ட்டிடம் ஆதாரங்கள் இருந்தன. வேறு வழியில்லாமல் உளவு பார்த்ததை அமெரிக்கா ஒப்புக் கொண்டது. அமெரிக்காவுக்கு உள்ளே மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு வெளியேயும் ஆன்லைன் தொடர்புகள் உளவு பார்க்கப்பட்டன என்பது தெரிய வந்தது. அமெரிக்க உளவுத்துறையால் உளவு பார்க்கப்பட்ட வெளிநாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியர்களின் இமெயில்கள், ஆன்லைன் சாட்டிங்குகள் மற்றும் தொடர்புகள் மொத்தம் 6.3 பில்லியன் (மில்லியன் அல்ல, பில்லியன்) அமெரிக்க உளவுத்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதற்கு எட்வார்ட் ஆதாரங்களை வைத்திருக்கிறார் என்கிறது கார்டியன் பத்திரிகை. எட்வார்ட்டின் விருப்பப்படி அவரது பெயரை வெளியிட்டுள்ளது கார்டியன் பத்திரிகை. அவர் ஹாங்காங்கில் தங்கியுள்ள தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ஹாங்காங்கில் எந்த ஹோட்டலில் தங்கியுள்ளார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
இனித்தான் ஆட்டம் சூடு பிடிக்கப் போகிறது. இப்போது உளவுத்துறைகள் எட்வார்ட்டை ஹாங்காங்கில் வலைவீசி தேடிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க உளவுத்துறையின் கைகளில் அவர் சிக்குவதற்குமுன், சீனா உளவுத்துறை அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன்வரும் என்று ஊகிப்பது சுலபம். கார்டியன், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகள் அனுப்பி வைத்த புலனாய்வு பத்திரிகையாளர்கள் கிளென் கிரீன்வால்ட், ஈவன் மேக்ஆஸ்கில் ஆகிய இருவரும், கடந்த வாரம் ஹாங்காங் சென்றபோது, ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள் என்ற விபரத்தை உளவுத்துறை வட்டாரங்கள் கண்டுபிடித்து விட்டன.
ஹாங்காங் நகரில் கௌலூன் பகுதியில் உள்ள ‘W’ ஹோட்டலில் அவர்கள் தங்கினார்கள். இந்த விபரம் தெரிய வந்ததையடுத்து, சி.என்.என்., தமது சார்பில் சில புலனாய்வு வேலைகளை செய்தது. ‘W’ ஹோட்டலுக்குள் புகுந்து விசாரித்தது. ஆனால், ஹோட்டல் நிர்வாகம், எட்வர்ட் ஸ்னோடன் என்ற பெயரில் தமது ஹோட்டலில் யாரும் தங்கவில்லை என்று கூறிவிட்டது.
ஹாங்காங் நகரில் கௌலூன் பகுதிக்கு அருகில் உள்ள ஷிம் சா சுய் பகுதியில் உள்ள மற்றொரு ஹோட்டலான மிரா ஹோட்டலில், எட்வர்ட் ஸ்னோடன் என்ற பெயரில் ஒருவர் தங்கி இருந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. ஆனால், அந்த ஹோட்டல் அதிகாரி மான்டி சான் என்பவர், “எட்வர்ட் ஸ்னோடன் என்ற பெயரில் தங்கி இருந்தவர், திங்கட்கிழமை ரூமை காலி செய்துகொண்டு போய்விட்டார்” என்று கூறியுள்ளார்.
News :Source
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக