மனிதநேய மக்கள் கட்சி கனிமொழிக்கு ஆதரவு
மாநிலங்களவைத் தேர்தல்களில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரிக்கப்போவதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்தார்.
கடந்த சட்டமன்றத்தில் அ இஅதிமுக கூட்டணியில் இடம்பெற்று இரண்டு தொகுதிகளில் வென்று, பொதுவாகவே ஆளும் அ இஅதிமுகவிற்கு ஆதரவாகவே செயல்படும் மனிதநேய மக்கள் கட்சி இப்போது திடீரென திமுகவை ஆதரிக்க முன்வந்திருப்பது புதியதொரு திருப்பத்தினை உருவாக்கியிருக்கிறது.
ஜவாஹிருல்லா காலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது சிஐடி காலனி இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், அ இஅதிமுகவின் நான்கு வேட்பாளர்களுக்கோ அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி இராஜாவிற்கோ தங்கள் கட்சி வாக்குக்கள் தேவைப்படாது, இந்நிலையில் தங்களது இரு வாக்குக்களை வீணாக்க விரும்பாமல் திமுகவேட்பாளரை ஆதரிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
'அதிமுக கூட்டணி முடிந்துவிட்டது'
நீங்கள் அ இஅதிமுக கூட்டணியில் இல்லையா எனக் கேட்டபோது, சட்டமன்றத் தேர்தல்களுடன் கூட்டணி முடிந்துவிட்டது என்றார்.
கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் அ இஅதிமுக எக்கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்மையில் புதுடில்லியில் முதல்வர் ஜெயலலிதா அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் தனித்தே போட்டியிடவிருப்பதாகக் கூறியிருந்தார்.
பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகவே பார்க்கப்படும் நரேந்திர மோடிக்கும் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்தப்பின்னணியிலே இஸ்லாமியர் மத்தியில் செல்வாக்கு பெற்றிருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் இன்றைய முடிவு என்கின்றனர் நோக்கர்கள்.
காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் இன்னமும் தங்கள் நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை..
--Thanks : BBC tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக