(A.J.M. மக்தூம்)
இன்னும் ஒரு சில நாட்களில் முழு முஸ்லிம் சமூகமும் பரவசமடையும் ரமழான் மாதம் பல அருட்பாக்கியங்களை சுமந்த நிலையில் எங்களை வந்தடையப் போகிறது இன்ஷா அல்லாஹ். அந்த மாதம் வந்து விட்டாலே அனைவரும் ஈமானிய புத்துணர்ச்சி பெற்று புதுப் பொலிவுடன் தென்படுவதை அவதானிக்கலாம். இதற்கு முன் தென்படாத புது, புது முகங்களெல்லாம் அல்லாஹ்வின் இல்லங்களை நோக்கி நகரும் காட்சி, கல் நெஞ்சங்களெல்லாம் இளகி கண்ணீர் சிந்தும் காட்சி என அந்த மாதத்தில் ஈமானிய இதயங்களில் இன்பத்தையும், ஆனந்தத்தையும் அள்ளி வீசும் இன்னோரன்ன காட்சிகளை அவதானிக்கலாம்.
அது அபரிமிதமான நற்பாக்கியங்களையுடைய மாதமாகும். அளவில்லா நட்கூளிகளைப் பெற்றுத் தந்து, நாளை மறுமையில் இறைவனை சந்திக்கும் வேலை முடிவில்லா இன்பத்தையும், சந்தோஷத்தையும் தரும் மகத்தான அமலாகிய நோன்பின் மாதமாகும். ஆயிரம் மாதங்களின் நன்மைகளை ஒரே இரவில் அள்ளித் தரும் “லைலதுல் கத்ர்” எனும் அருட்பாக்கியங்கள் நிறைந்த ஓர் இரவை தன்னகத்தே தாங்கி வரும் மாதமாகும். இறை வேதமாகிய புனிதமிகு அல் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதமாகும்.
அல் குர்ஆன் வலியுறுத்தும் உயரிய பண்புகளை, ஒழுக்க விளுமியங்களை எல்லாம் கடைப்பிடித்து ஒழுக வழி அமைத்துக் கொடுக்கும் மாதமாகும். இஸ்லாம் போதிக்கும் மனித நேய பண்புகளை கற்றுக் கொடுக்கும் மாதமாகும். பொறுமை, சகிப்புத் தன்மை, பரிவு, கருணை போன்ற உன்னத பண்புகளை போதித்து பயிற்றுவிக்கும் மாதமாகும். பொறாமை, கோபம், குரோதம், பழிக்குப்பழி எனும் கொடூர உணர்வுகளை இல்லாதொழிக்கும் மாதமாகும். விட்டுக் கொடுப்பு மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் மாதமாகும்.
செல்வச் செழிப்பில் வாழ்வோர் பசியின் பாரத்தை உணர்வதின் மூலம் தம் கையால் சிரமத்துடன் உழைத்து சம்பாதித்த பொருளில் இருந்து ஏழை எளியோருக்கு வாரி வழங்கும் மகத்தான பண்பை ஊக்குவிக்கும் மாதமாகும். அனைத்து நல்லறங்களுக்கும் விரைந்து செலவு செய்யும் பண்பாட்டை உறுதிப் படுத்தும் மாதமாகும். அருவருப்பான உலோபித் தனத்தை அழித்தொழிக்கும் மாதமாகும்.
அது கடமையான தொழுகைகள் உட்பட இறைநேசர்களின் வழக்கமாகிய இரவில் நின்று வணங்கும் பழக்கத்தை சலிப்பின்றி கடைப்பிடித்து ஒழுக பயிற்சி அளிக்கும் மாதமாகும். படைத்து, பரிபாலித்து, போஷிக்கும் அகில உலக இரட்சகனாகிய அல்லாஹ்வை இரு கரமேந்தி பிரார்த்திக்கவும், நமது தேவைகளை அவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் கற்றுத் தரும் மாதமாகும். பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப் படும் மாதமாகும்.
அது மக்ஹ்பிரத் மற்றும் தௌபாவின் வாயிலைத் திறந்து, பாவச் சேற்றில் புதைந்து கிடப்பவர்களை தூய்மைப் படுத்தி, மனித புனிதர்களாக மாற்றி நரக விடுலையை பெற்றுக் கொடுக்கும் மாதமாகும். மனிதர்களை வழி கெடுப்பதை தமது தொழிலாக மேற்கொண்டு வரும் ஷைத்தான்கள் விலங்கிடப் பட்டு நல்லறங்களை நிம்மதியாக செய்வதற்கு சந்தர்பத்தை ஏற்படுத்தித் தரும் மாதமாகும்.
சுவர்கத்தின் வாயில் திறக்கப் பட்டு அதன் விருந்தாளிகளின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். தனிமையில் இருக்கும் போதும் இறைவனை அஞ்சி பாவங்களில் இருந்து தவிர்ந்து வாழ, முகஸ்துதி அற்ற நிலையில் நன்மைகளை புரிய இக்லாஸ் எனும் மனத் தூய்மையை அதிகரிக்கச் செய்யும் மாதமாகும்.
ஆக மொத்ததத்தில் “தக்வா” எனும் பயபக்தி உடையோரிடம் என்னென்ன பண்புகள் காணப்படுமோ அனைத்தையும் ஏற்படுத்தி பயிற்றுவித்து வளர்க்கும், ஈமானிய பயிற்ச்சி பாசறையாக விளங்கும் உன்னதமான மாதம் தான் ரமழான்.
ரமழான் எனும் பயிற்ச்சி பாசறை வழங்கும் அனைத்து பயிற்ச்சி நெறிகளையும் கச்சிதமாக பூர்த்தி செய்து விட்டு வெளியேறு வோருக்கு வழங்கப் படும் சான்றிதழ் “தக்வா உடையோர்” பயபக்தி உடையோர்” என்பதாகும். இதனையே இறை மறை பின்வருமாறு தெளிவு படுத்துகிறது.
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம் ஆகலாம். (அல் குர்ஆன் 2:183)
இந்த மாதத்தில் அகிலத்தின் அதிபதி அல்லாஹ் அளவின்றி அள்ளி வழங்க காத்துக் கொண்டிருக்கும் அளப்பெரிய பாக்கியங்களை அடைந்து கொள்ள முயட்சிக்காது, முற்றிலும் இலவசமான மற்றும் இலகுவான இந்த பயிற்ச்சி பாசறையின் தேர்வு பரீட்சையில் தோல்வியைத் தழுவுவோர், உண்மையிலேயே துர்பாக்கியமுடையோரே. அவர்களின் இழி நிலைப் பற்றி பின்வரும் நபி மொழி நமக்கு உணர்த்துகிறது.
“யார் ரமழான் மாதத்தை அடைந்தும் அவன் பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்ளாத நிலையில் அவனை விட்டும் அது கடந்து சென்று விடுகிறதோ அவன் நஷ்டமடைந்து விடுவான் / இழிவடைந்து விடுவான்” என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
எந்த சங்கடமும் இன்றி ரமழான் நோன்பை உற்சாகத்துடன் நோற்று பாக்கியங்களை அடைந்து கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகதிகம் நோன்பு நோற்று பழக்கப் பட்ட நிலையில் ரமழானை அடைய விரும்பியுள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.
நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபான் ஆகும், அத்துடன் அதைத் தொடர்ந்துள்ள ரமழான் மாதத்தை (நோன்பு நோற்று பழக்கப் பட்ட நிலையில்) அடைவதையும் விரும்பினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு அபீ கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி).
எனவே நாமும் எதிர் வரும் ரமழானை அடைந்து, அதில் இறைவன் ஏற்படுத்தியுள்ள அனைத்து அருட்பாக்கியங்களையும் வென்று, இறைவனின் திரு பொருத்தத்தை அடைய, இறைவனிடம் பிரார்த்திப்பதோடு, இப்பொழுதிலிருந்தே அதற்காக முயற்சிப்பதும் அவசியமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ரமழானை அடைந்து அதனை பலனுள்ளதாக கழித்து இறை அருளையும், பாக்கியங்களையும் வென்ற புண்ணிய சீலர்களான பயபக்தியாளர்கள் வரிசையில் நம்மனைவரையும் ஆக்கியருள்வானாக…!
berunews.wordpress THANKS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக