26 Jun 2013
சென்னை:தமிழகத்தின் சட்டப்பேரவையிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை (ராஜ்யசபா) க்கு நடக்கவிருக்கும் தேர்தல்களில், ஆறாவது இடத்துக்கான போட்டியில், திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது.
இந்த முடிவை தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் நேற்று(செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்றத்தில் ஐந்து உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே திமுக வேட்பாளர் கனிமொழிக்கு திமுகவின் 23 உறுப்பினர்கள் ஆதரவுடன் , மனித நேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சியின் தலா இரண்டு உறுப்பினர்களும் ஆதரவளிக்கும் நிலையில், காங்கிரஸின் ஆதரவு அவரது வெற்றி வாய்ப்பை உறுதிச் செய்யும் என்று கருதப்படுகிறது.ஆறாவது இடத்துக்கு போட்டியிடும் மற்றுமொரு கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் வாய்ப்புகள் இப்போது குறைந்து வருகின்றன.
சட்டப்பேரவையில் அக்கட்சிக்கு 29 உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்களில் ஏழுபேர் கட்சித் தலைமைமீது அதிருப்திகொண்டு அ இஅதிமுக அரசிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பத்தின்படியே வாக்களிக்கக்கூடும். அவர் என்ன நினைக்கிறார் என்பது தெரியாத நிலையில் தேமுதிக வேட்பாளருக்கு 22 வாக்குகளே உறுதி. ஏழுபேரும் தேமுதிகவிற்கு வாக்களித்தாலும் இளங்கோவனுக்கு 29 வாக்குகள்தான். அந்த அளவில் அவரை காங்கிரஸ் ஆதரிக்க முன்வராத நிலையில் தேமுதிகவிற்கு பின்னடைவே.
தேர்தல் நடக்கவிருக்கும் ஆறு இடங்களில் ஆளும் அதிமுக நான்கு இடங்களிலும், அதன் ஆதரவு பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன. அவை வெற்றிபெறுவது உறுதி என்று நம்பப்படுகிறது.
.thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக