ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை
உயர்வை உடனடியாக திரும்பப் பெற்று, இந்திய ரூபாயின் மதிப்பு
வீழ்ச்சியடைவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர்
ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா
வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய்
மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி, விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த
நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி
விலைவாசி உயர்வுக்கு வழி வகுப்பதை மத்திய அரசு வாடிக்கையாகக் கொண்டிருப்பது
ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயலாகும்.
பெட்ரோல் விலையை
உயர்த்தி 15 நாட்கள் கூட ஆகாத நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல் விலையை
லிட்டருக்கு 1 ரூபாய் 82 காசு என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு
உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்விற்கு முக்கிய மற்றும் மூல காரணமாக
விளங்கும் இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
எடுக்காமல், மனம் போன போக்கில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது
என்பது மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கும்,
கையாலாகாத்தனத்திற்கும் ஒரு சிறந்த சான்றாகும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா
குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஒரே மாதத்தில் மூன்றாம் முறையாக
பெட்ரோல் விலையை உயர்த்துவது என்பது மக்கள் உணர்வுகளுக்கு மத்திய அரசு
மதிப்பு அளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக இரு
சக்கர வாகனங்களை பயன்படுத்தும் ஏழை, எளிய மக்களும், ஆட்டோவில் செல்லும்
சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
பெட்ரோலை எரிபொருளாக
பயன்படுத்தும் தொழிற்சாலைகளும் கூடுதல் நிதியை சுமக்க வேண்டிய
கட்டாயத்திற்குத் தள்ளப்படும். இதன் விளைவாக, அந்த தொழிற்சாலைகளில்
தயாரிக்கப்படும் பொருட்களின் விலைகள் உயரக் கூடும். அதன் மூலம் அனைத்துப்
பொருட்களின் விலைகளும் மேலும் உயர வழி வகுத்துள்ளது.
எனவே, ஏழை, எளிய,
நடுத்தர மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை உயர்வை
உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், பெட்ரோலியப் பொருட்களின் விலை
உயர்விற்குக் காரணமாக விளங்கும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதை
தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர்
ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக