புது டெல்லி, ஜூன். 23 - உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழைக்கு ருத்ரபிரயாகை, சமோலி ஆகிய 2 மாவட்டங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. அதிலும் குறிப்பாக கேதர்நாத், ருத்ரபிரயாகை வழித்தடம் சின்னாபின்னமாகி விட்டது. அந்த சாலையை செப்பனிடவே 2 ஆண்டுகள் ஆகும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.
கேதர்நாத், பத்ரிநாத் புனித தலங்களுக்கு செல்லும் பாதையில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காட்டாற்று வெள்ளம் போல் பல இடங்களில் தண்ணீர் கிளம்பியதில் சுமார் 200 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன. அந்த கிராமங்களில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. கேதர்நாத், ருத்ரபிரயாகை சாலையில் சுமார் 50 ஆயிரம் பேர் இன்னமும் தவித்தபடி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேரழிவு ஏற்பட்டதும் மீட்பு குழுக்களை அனுப்பி விட்டு மத்திய அரசு மெத்தனமாக இருந்து விட்டது. பெருமளவில் மக்கள் பலியாகி விட்டனர் என்று தெரிந்த பிறகே மத்திய அரசு முழுவீச்சில் இறங்கியது. அதன் பிறகுதான் நிவாரண பணி குழு தலைவராக முன்னாள் உள்துறை செயலாளர் வி.கே. துக்கலை மத்திய அரசு நியமித்துள்ளது. இனிமேல் தான் அவர் உத்தரகாண்டுக்கு சென்று ஒருங்கிணைப்பு வேலைகளை தொடங்க வேண்டும். கேதர்நாத்தில் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. அவற்றை தேடும் பணியை தொடங்க இனி ஒரு மாதமாகலாம். கேதர்நாத்தை சுற்றி சுமார் ஆயிரம் பேர் கடைகள் வைத்திருந்தனர். இவர்கள் அனைவருமே வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் கேதர் பள்ளத்தாக்குகளில் இருந்து 985 பேரை மீட்டுள்ளனர். மற்றவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
thinaboomi. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக