பிரபல ‘மக்கள் ஓசை’ தமிழ் நாளேடு தலையங்கம்
சென்ற 17.05.2013 அன்று தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மலேசியாவில் இந்தியர்கள் பாதிக்கப்படுவதாக ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக அந்த அறிக்கை இருந்தது. இந்த அறிக்கை மலேசியாவில் உள்ள இந்தியர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் பல்வேறு வேலைகளுக்கு தொழிலாளர்களாக இந்தியத் தமிழர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
1957ல் மலேசியா, சுதந்திரம் பெற்றபோது அப்போதைய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், பெருந்தன்மையோடு அங்கு குடியேறிய இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கினார்.
இன்று மலேசியாவில் 7.5 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் தமிழர்கள் ஆவர். மதரீதியாகப் பார்த்தால் அவர்களில் 4 சதவீதம் பேர் இந்துக்களாகவும், 2.5 சதவீதம் பேர் முஸ்லிம்களாகவும், மீதி 1 சதவீதத்தினர் கிருத்தவர்கள் மற்றும் சீக்கியர்களாகவும் வாழ்கிறார்கள்.
அங்கு ஐந்து தமிழ் தினசரிகள் உட்பட ஏராளமான தமிழ் செய்தி ஏடுகள் வெளிவருகின்றன. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழில் வெளிவருகின்றன. அங்குள்ள அரசு வேலை வாய்ப்புகளில் முக்கியப் பொறுப்புகளில் இந்துக்கள் உள்ளனர். மலேசிய வழக்கறிஞர்களில் இவர்களின் சதவீதம் அதிகமாகும். அந்த நாட்டின் பூர்வீக மலாய் முஸ்லிம்களைவிட பல நல்ல தொழில்களையும் வசதிகளையும் பல துறைகளில் பெற்றிருக்கிறார்கள்.
தற்போதைய புதிய அரசில் 6 இந்துக்கள் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இந்திய முஸ்லிம்களை விட இந்தியாவிலிருந்து குடியேறிய இந்துக்களுக்கு அங்கு அரசியல், சமூக மரியாதைகள் அதிகம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
மலேசியாவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூகங்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும்கூட, அங்கு குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். இந்தியப் பொதுமக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
இந்தியாவுக்கு வெளியே இந்துக்கள் மகிழ்ச்சியாக, வளமுடன் வாழும் நாடு மலேசியாதான்!
இதை உறுதிப்படுத்தும் விதமாக மலேசிய தமிழ் நாளிதழான ‘மக்கள் ஓசை’யில் அதன் ஆசிரியர் ராஜன் அவர்கள் எழுதிய தலையங்கத்திலிருந்து சில பகுதிகளை இங்கே வெளியிடுகிறோம்.
இந்தப் பத்திரிகையானது நடுநிலை நாளிதழாக கூறிக்கொண்டாலும், எதிர்க்கட்சி செய்திகளுக்கும், இந்துத்துவ செய்திகளுக்கும் முன்னுரிமைக் கொடுக்கிறது என்ற கருத்தும் அங்கே நிலவுகிறது.
அப்பத்திரிக்கையின் தலையங்கம் பாஜகவு க்கு மட்டுமல்ல; மலேசிய இந்துக்களின் வாழ்வுரிமை குறித்த பல அபாண்டக் குற்றச்சாட்டுகளுக்கும் மனசாட்சியோடு சாட்டையடி தருகிறது. இனி ‘மக்கள் ஓசை’யைப் படியுங்கள்...
“எந்த நாட்டிலும் உள்ள ஒரு சிறுபான்மை சமூகம் அடைய முடியாத வசதிகளைப் பெற்று, நாம் வாழும் தேசம் இது என்பதை மனசாட்சியுடன் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அரசியல் சட்டத்திலேயே நமக்குரிய அடிப்படை உரிமைகள் நிலை நாட்டப்பட்டு கருத்துச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரத்தை வழங்குகின்ற நாடு இது. கூடவே இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட அற்புதமான தாய்த்திருநாடு இது. நமது வாழ்வும் தாழ்வும் இங்கேதான். இங்கே உழைக்கத் தயாராக இருந்தால், உன்னதமான வாழ்க்கை நமக்குச் சொந்தம் என்பதை அனுபவப்பூர்வமாகத் தந்திருக்கிற நாடு இது. உங்கள் வளர்ச்சியைத் தடுக்க இங்கே யாருமில்லை.
தமிழ்நாட்டில் கூட, இப்படிப்பட்ட கோவில்கள் உண்டா? என்று வியக்கும் அளவிற்கு, பளிங்குக் கல்லாலான ஆலயங்களில் நமது தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் அழமைகக் காண்கிறோம். இவ்வளவு அழகான தரமிக்க கோவில்கள் உங்கள் நாட்டில் உண்டா என்று தமிழர்கள் வாழும் நாடுகளுக்கே நம்மால் சவால்விட முடியும். நிறைவான வருமானம், வசதியான வீடு, வாகனம் என்று ஒன்றல்ல இரண்டு மூன்று என்கின்ற அளவில், நாம் உழைத்து ஒரு தரமான வாழ்க்கையை அனுபவிக்கும் பேறு கிடைத்திருக்கிறது.
55 ஆண்டுகள் இந்த அரசாங்கம் நமக்கு எதுவுமே செய்யவில்லை என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டால், மனசாட்சி உள்ள மலேசிய இந்தியர்கள் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படியென்றால், தேசத்தந்தை துங்கு காலம் தொடங்கி, நஜிப் காலம் வரை, நாம் ஏதோ இருண்ட காட்டில் வாழ்வதாக அர்த்தமாகி விடும். இந்த நூற்றாண்டு காலம், இங்கு ஆலயங்களோ, தமிழ்ப் பள்ளிகளோ, இந்தியர்கள் குடியிருக்க வீடுகளோ, அடிப்படை வசதிகளோ இல்லாமல் நாம் வாழ்கிறோம் என்றாகி விடும்.”
& ஆசிரியர்,
மக்கள் ஓசை 5.5.2013, மலேசியா
மக்கள் ஓசை நாளிதழ் உண்மையை உலகிற்கு கூறிவிட்டது. பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத அமைப்புகளும், தமிழின உணர்வாளர்களும் இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நாட்டில் நிம்மதியாக வாழ்ந்து வரும் இந்து சமூக மக்களை இந்தியாவின் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ‘ஹின்ராப்’ போன்ற அமைப்புகள் தவறாக வழிநடத்தி கடந்த காலங்களில் அவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உருவாக்கிவிட்டன. இனியாவது அவர்களின் பாசிச வழிகாட்டுதல்களிலிருந்து விடுபட்டு பெரியாரிய, தமிழ் & பாரம்பரிய பண்பாட்டு சிந்தனைகளோடு அவர்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைத்து கொள்ளவேண்டும். அதுவே அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக