puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 13 மே, 2013

பா.ம.க.விடம் இருந்து நஷ்டஈடு பெறப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு




பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்து சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று கொண்டு வரப்பட்டது. இதன் மீது எம்.எல்.ஏ.க்கள் சவுந்தர்ராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ), ஆறுமுகம் (இந்திய கம்யூ), பிரின்ஸ் (காங்.), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர் பேசினார்கள். இதற்கு பதில் அளித்து முதல் - அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.



அவர்,  ‘’பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து வட மாவட்டங்களில் வன்முறை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது குறித்து எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்து இருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி 25.4.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடத்திய ‘சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா’வின் போது மரக்காணத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் 29.4.2013 அன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டு, உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
அதற்குப் பதில் அளித்து நான் பேசிய போது, சுய லாபத்திற்காக அப்பாவி பொதுமக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் தூண்டிவிட்டு வன்முறைச் செயல்களுக்கு காரணமாக இருப்பவர்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு ஊறு விளை விப்பவர்கள்யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த வித கருணையும் இன்றி சட்டப்படி நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும், வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இந்த அரசு தயங்காது என்றும் நான் தெரிவித்து இருந்தேன்.
இந்நிலையில், மரக்காணம் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, 30.04.2013 அன்று விழுப்புரத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் மிகப் பெரிய அளவில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்றும், 01.05.2013 அன்று அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலை நகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்றும் டாக்டர் ராமதாஸ் ஓர் அறிக்கை வெளியிட்டார். 
மரக்காணம் சம்பவத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்துவது வன்முறைக்கு வழிகோலும் என்பதாலும், சாதி சச்சரவுகளுக்கு வித் திடும் என்பதாலும், இது சம்பந்தமான ஆர்ப்பாட் டங்களுக்கு அனுமதி கொடுப் பதில்லை என்ற முடிவை காவல் துறை எடுத்தது. இதனை அடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்த தொடர் முழக்கப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து, அதற்கான ஆணை அக்கட்சியின் விழுப்புரம் நகரச் செயலாளருக்கு சார்வு செய்யப்பட்டது.


காவல் துறையினர் முறையாக, பேராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவித்திருந்தும் அக்கட்சி யின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அம்மாவட்டத்தில் அப்போது நிலவி வந்த சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாது, காவல் துறையினர் சட்டம் ஒழுங்கினை பராமரிக்க ஒத்துழைப்பு அளிப்பதற்குப் பதிலாக, பொறுப்பில்லாமல் தடையை மீறி அனுமதி மறுக்கப்பட்ட போராட்டத்தை தலைமையேற்று நடத்த 30.4.2013 அன்று பிற்பகல் 12.15 மணியளவில், தங்கள் கட்சியினருடன் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சட்ட விரோதமாகக் கூடிய தால், வேறு வழியின்றி டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட 363 பா.ம.க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் பல இடங்களில் சாலைகளை மறித்து, போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து வருகின்றனர். வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், கற்களை வீசி வாகனங்களைச் சேதப்படுத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி, இக்கட்சியினர் கும்பலாகச் சேர்ந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளை வழி மறித்து, அப்பாவி பயணிகள்


கண் எதிரிலேயே பீதியை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களைத் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். மேலும், சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் வழி மறித்து ஓட்டுநர்களை தாக்கி, அவ்வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர். இதற்கிடையில், அக்கட்சி யின் இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், டாக்டர் ராமதாஸை அரசு கைது செய்து சிறையில் அடைத்து, அரசியல் பழி வாங்கும் படலத்தை தொடங்கிவிட்டதாகவும்; ராமதாஸ் கைது செய்யப்பட்ட பின்னர் அலைக்கழிக்கப்பட்டு, கொடுமைப் படுத்தப்பட்ட தாகவும்; கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிக்கை வெளியிட்டார்.
டாக்டர் அன்பு மணி ராமதாஸின் இந்த அறிக்கை “எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார் போல்” என்ற பழமொழிக்கேற்ப வன்முறையை தூண்டும் விதமாக அமைந்தது. இதனையடுத்து, அக்கட்சி யினர் தொடர்ந்து பல் வேறு இடங்களில் சட்ட விரோதச் செயல்களிலும், வன் முறையிலும் ஈடுபட்டனர். குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை; காஞ்சிபுரம் மாவட்டம்

தாமல், உவேரிசத்திரம், வதியூர்; வேலூர் மாவட்டம் மருதாலம், கோணலம், பெருங்களத்தூர்; திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம், மேல்பூதேரி, சிந்தனைக்கால்; திருவள்ளூர் மாவட்டம் புஜ்ஜி ரெட்டிப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகளுக்கும், தனியார் பேருந்துகளுக்கும், லாரிகளுக்கும் தீ வைத்ததில் வாகனங்கள் சேதமடைந்தன. இத்தகைய ஈவு இரக்கமற்ற சம்பவங்களால், ஓட்டுநர்களும் பயணிகளும் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் முதலில் வாகனங்களை நிறுத்தி பயணிகள் இறங்கிய பின் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தனர். பின்னர் தீவிரவாத இயக்கங்களைப் போல ஓடும் வண்டிகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி பயணிகளை பெரும் பீதிக்கும் ஆபத்துக்கும் உள்ளாக்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் கிராமம் அருகே இரு சக்கர வாகனங்களை ஏற்றிச் சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சரக்கு லாரியையும், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே இரும்பு ஏற்றிச் சென்ற லாரியை யும் வழி மறித்துப் பெட்ரோல் எரியூட்டப்பட்ட பாட்டில்களை வீசியதில் அந்த லாரிகள் தீக்கிரையாகின. இச்சம்பவத்தில், வட மாநில லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சர்கார் கான் என்பவர் பலத்த தீக் காயம் அடைந்து மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இக்கட்சியினர் மாநிலம் முழுவதும் பல இடங்களில் பேருந்துகள் மீது கற்களை வீசியதில் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. இக்கல் வீச்சு சம்பவத்தில் பலர் காயம் அடைந்துள்ளது மட்டுமின்றி மரணங்களும் நடந்துள்ளன.


குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் முருக்கேறி கிராமம் அருகே ஒரு லாரியை வழி மறித்து, கல் வீசி தாக்கிய சம்பவத்தில் மரக்காணத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற ஒட்டுநர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அது மட்டுமின்றி ஈரோடு மாவட்டம், புஞ்சைப் புளியாம்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவர் சிதம்பரத்தில் இருந்து சேலம் சென்ற அரசு பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது, அப்பேருந்தின் மீது கல் வீசியதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிழக்குக் கடற்கரைச் சாலை கடும்பாடி அருகில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்றின் மீது கல் வீசியதில், அப்பேருந்தில் பயணம் செய்த சென்னை மணலியைச் சேர்ந்த சுதர்சனம் என்பவர் படுகாயம் அடைந்து, சுயநினைவின்றி சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தருமபுரி மாவட்டம், மோட்டான்குறிச்சி அருகே சென்னையிலிருந்து நாகர் கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் வண்டி யின் மீது இக்கட்சியினர் எரியூட்டப்பட்ட மண்ணெண்ணெய் பாட்டிலை வீசியதில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சேலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை நகராட்சி திருமண மண்டபம் அருகே காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் பேருந்து ஒன்றின் மீது பாட்டாளி மக்கள் கட்சியினர் எரியும் தீப் பந்தத்தை வீசியுள்ளனர். இதில் ஓட்டுநர் காவலர் ராஜகணபதி என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.


காவல் வாகனமும் தீக்கிரையானது. தருமபுரி மாவட்டம், கராத்தான் குளம் அருகில், உள்ள ஒரு பாலத்தை பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த இருவர் வெடி பொருட்களை வைத்து தகர்க்க முற்பட்டபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே போன்று, பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் ஒருவர் நாமக்கல் மாவட்டம், ஆத்தூர்ராசிபுரம் சாலையில் ஒரு பாலத்தை வெடி பொருட்கள் வைத்து தகர்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அவரைக் கைது செய்து, இருசக்கர வாகனத்தையும், வாகனத்தில் இருந்த டெட்டோனேட்டர் உள்ளிட்ட வெடி பொருட்களையும் கைப்பற்றினர்.
விழுப்புரம் மாவட்டம், மோட்டான்குளம் அருகே உள்ள ஒரு வாய்க்கால் பாலத்தை வெடி பொருட்கள் வைத்தும்; காஞ்சிபுரம் மாவட்டம், ஓரத்தி தொழுப்பேடு சாலையில் மின்னல் சித்தாமூர் கிராமத்திற்கு அருகே பாலத்தில் இருந்த சிமெண்ட் பலகைகளைப் பெயர்த்தும் அப்பாலங்கள் சேதப்படுத் தப்பட்டன. தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர்ஓடசல்பட்டி சாலையில் வேதரம்பட்டி கிராமம் அருகில் சிமெண்ட்டினால் ஆன குழாய் பாலம் ஒன்றை பாட்டாளி மக்கள் கட்சியினர் வெடி பொருட்கள் வைத்து வெடிக்க செய்து சேதப்படுத்தியுள்ளனர்.
சேலம் மாவட்டம் சாவடிபுதூர் கிராமத்தில் தண்ணீர் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் குழாயினையும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வெடி பொருட்கள் வைத்துத் தகர்த்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அன்னசாகரம் மற்றும் சேலம் மாவட்டம், சந்தைப்பேட்டை, கருங்காலூர் ஆகிய இடங்களில் நியாய விலைக் கடைகளின் மீது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை எறிந்ததில் ஏற்பட்ட தீயினால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்கள், வேட்டி சேலைகள் ஆகியவை சேதம் அடைந்தன.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஒரு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு உர கிடங்கையும் பாட்டாளி மக்கள் கட்சியினர் தீ வைத்துச் சேதப்படுத்தினர். இச்சம்பவத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உர மூட்டைகள் சேதம் அடைந்தன. பாட்டாளி மக்கள் கட்சியினர் முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைகளை நாமக்கல் மாவட்டம் சேந்த மங்கலத்தில் தீ வைத்து கொளுத்தியதோடு வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கன்னிகாபுரத்தில் உள்ள சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், எண்டியூரில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமரியாதையை இழைத்துள்ளனர். தகவல் அறிந்ததும் காவல் துறையினர் விரைந்து சென்று செருப்பு மாலையை அகற்றியுள்ளனர். விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 22 அரசு மதுபானக் கடைகள் மீது எரியூட்டப்பட்ட தீப்பந்தங்கள் மற்றும் பெட்ரோல் பாட்டில்களை ஜன்னல் வழியாக வீசியும், பெட்ரோல் ஊற்றி தீ வைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். சில மதுபான கடைகளின் பின் சுவற்றில் துளை போட்டு அதன் வழியாக எரியூட்டப்பட்ட பெட்ரோல் குண்டுகளை உள்ளே வீசி கடைகளுக்குத் தீ வைத்துள்ளனர். 
இச்சம்பவங்களில் பல லட்சம் மதிப்புள்ள அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டம், கொல்லஹள்ளி என்ற கிராமத்தில் இயங்கி வந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் பாட்டாளி மக்கள் கட்சியினர் தீப் பந்தத்தை எறிந்ததில் அலுவலகத்தில் இருந்த பல ஆவணங்கள், அலுவலகப் பொருட்கள் மற்றும் மரச் சாமான்கள் சேதம் அடைந்தன. 17 குடிசை வீடுகள், பெட்டிக் கடைகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றையும் பாட்டாளி மக்கள் கட்சியினர் தீ வைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டம், நெமிலி அருகே கல் வீச்சு சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இரண்டு நபர்களை நெமிலி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, காவல் துறை யினரை முற்றுகையிட்டு சட்ட விரோதமாக நிறுத்தி வைத்து பாட்டாளி மக்கள் கட்சியினர் தகராறு செய்தனர்.
தகவல் கிடைத்த அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் மற்றும் நெமிலி காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, பாட்டாளி மக்கள் கட்சியினர் காவல் வாகனங்களை கல்வீசி தாக்கி சேதப்படுத்தியதோடு, பெண் ஆய்வாளரையும் தாக்க முயன்றுள்ளனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் நிலைய சரகம், அண்ணா மடுவில் உள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.ரமணிதரன் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சைக்கிள் டயரில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து விஷமிகள் உள்ளே வீசியதில், அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், குளிர் சாதன இயந்திரம், மரப் பொருட்கள் ஆகியவை எரிந்து சேதம் அடைந்துள்ளன.
இது தொடர்பாக, 5.5.2013 அன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்

டது. விசாரணையின் போது, அந்தியூர் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய முன்னாள் அமைப்பாளர் குருசாமி உள்ளிட்ட ஒன்பது பேர் இத்தீ வைப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டு இருந்தது தெரிய வந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் திரு. குருசாமி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 3.5.2013 அன்று இரவு காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் காவல் நிலைய சரகம், பவுஞ்சூரில், செய்யூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வி.எஸ்.ராஜு அவர்களது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா காரின் மீது எரியூட்டப்பட்ட மண்ணெண்ணை நிரப்பிய பாட்டிலை வீசி காரை தீக்கிரையாக்க விஷமிகள் முயன்றுள்ளனர்.
விஷமிகள் வீசிய பாட்டில் காரின் பின்புறம் பட்டு கீழே விழுந்து உடைந்து நெருப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையில் உள்ளது. தீ வைப்பு சம்பவங்கள் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் வாகனங்களை மறித்து, அவர்களை பணி செய்யவிடாமல் பாட்டாளி மக்கள் கட்சியினர் தடுத்துள்ளனர். இதனால், அத்துறையினர் உடனடியாக சம்பவ இடங்களுக்கு சென்று தீயணைப்புப் பணிகளில் ஈடுபட இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.


30.4.2013 அன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் அன்று சட்டவிரோதமாக தடையை மீறி கூடிய போது அவர்களை காவல் துறையினர் கைது செய்த காரணத்திற்காக, அக்கட்சியினர் மாநிலத்தில் பல இடங்களில் தொடர்ந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு, பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு தீ வைத்தல், பேருந்துகள் மீது கல் வீசி பயணிகளுக்கு காயம் விளைவித்தல், நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களை வெடி பொருட்கள் வைத்து சேதப்படுத்துதல், நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களை வெட்டிச் சாய்த்து சாலைகளில் தடைகள் ஏற்படுத்துதல், மரங்களை தீ வைத்து கொளுத்துதல், ஓடுகிற ரயில் வண்டி மீது தீப் பந்தத்தை எறிதல், அரசு அலுவலகங்கள், அரசு கிடங்குகள், நியாய விலைக் கடைகள், பேருந்துப் பணிமனைகள் ஆகிவற்றைத் தீ வைத்து சேதப்படுத்துதல், காவல் துறை வாகனங்களைத் தாக்கியும், தீ வைத்தும் சேதப்படுத்துதல், பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் குழாயை சேதப்படுத்துதல், இத்தகைய மக்கள் விரோத செயல்களைத் தடுக்க முயன்ற காவலர்களை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்துத் தாக்குதல் போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


பாட்டாளி மக்கள் கட்சியினர் நிகழ்த்திய இவ்வன் முறை சம்பவங்கள் காரணமாக இரண்டு சரக்கு லாரிகள் மற்றும் 14 பேருந்துகள் உட்பட 16 வாகனங்கள் தீக்கிரை ஆகியுள்ளதுடன், ஒரு அப்பாவி ஓட்டுநர் தீ காயம் அடைந்து இறந்துள்ளார். மேலும், வாகனங்கள் மீது கல் வீசி தாக்கிய சம்பவங்களில் ஒரு அப்பாவி லாரி ஓட்டுநர் மற்றும் அப்பாவி பயணி ஒருவர் இறந்துள்ளதுடன், 111 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும், அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் என மொத்தம் 853 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியினரால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் ஆகும். இரண்டு பாலங்கள் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நெடுஞ்சாலைகளில் நிழல் தந்து வந்த 120 மரங்கள் சாலைகளில் வெட்டிச் சாய்க்கப்பட்டும், 45 மரங்கள் எரிக்கப்பட்டும், மொத்தம் 165 மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஒரு மரம் வளர பல ஆண்டுகள் பிடிக்கும். வளர்ந்த பின், நூற்றுக் கணக்கான ஆண்டுகள் தனது கிளைகளாலும், இலைகளாலும் நிழலைத் தந்து, காய் கனிகளை வழங்கி, மழை தந்து, மனித இனத்திற்கு அளப்பரிய தொண்டாற்றுபவை மரங்கள். இப்படிப்ப


ட்ட பெருமை வாய்ந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பது மனித இனத்தையே வெட்டிச் சாய்ப்பதற்கு சமமாகும்.
பசுமைத் தாயகம் என்ற பெயரில் ஒரு புறம் மரங்களை நடுவதாகக் கூறிக் கொண்டு, மறு புறம் மரங்களை வெட்டி சாய்ப்பது தீ வைத்து எரிப்பது என்பது “படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழியைத் தான் நினைவு படுத்துகிறது. காவல் துறையினர், கடந்த பல நாட்களாக பாட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறைச் செயல்களை தடுக்க முழு வீச்சில் தங்களது திறன் முழுவதையும் உபயோகித்து நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டும், முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும், மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் சட்டம் ஒழுங்கைப் பராமரித்து வருகின்றனர்.
மேலும், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து கைது செய்து வருகின்றனர். இதுவரை 5,720 நபர்கள் தடுப்பு நடவடிக்கையாகவும், 1,744 நபர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்யப்பட்டு, நீதி மன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 20 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினர், கடந்த சில நாட்களாக நிகழ்த்தி வரும் வன் முறைச் செயல்களினால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பகல் நேரங்களைப் பொறுத்த வரையில், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர், காஞ்சிபுரம், நாமக்கல், தருமபுரி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், 1.5.2013 அன்று 1,601 தடப் பேருந்துகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இயக்கப்பட வில்லை.
பின்னர் அரசு மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக 10.5.2013 முதல் இது 219 ஆக குறைக்கப்பட்டது. இரவு நேரங்களைப் பொறுத்த வரையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி நகரப் பேருந்துகள் மாலை 6 மணிக்கு மேலும், புறநகர் பேருந்துகள் இரவு 10 மணிக்கு மேலும் இந்த மாவட்டங்களில் இயக்கப்படுவதில்லை. மொத்தத்தில், 2,267 தடப் பேருந்துகள் இரவு நேரங்களில் இயக்கப்படவில்லை. அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளினால் தமிழகத்தில் தொழிற்சாலைகளைத் துவங்க பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில், மாநிலத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நல்ல அபிப்பிராயத்திற்கு களங்கம் ஏற்படுத்தி, தொழில் முதலீட்டிற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறை அமைந்துள்ளது.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் அமைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறைகளை காவல் துறை மிகுந்த துணிவுடனும், நெஞ்சுரத்துடனும், பொறுமையுடனும் எதிர்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைக்கும் வகையில் காவல் துறை செயல்பட்டு வருகிறது. சிறையில் இருந்து பிணையில் வெளி வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர்கள் இடையே பேசுகையில், பா.ம.க.வினர் மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
 
11.5.2013 அன்று பிணையில் விடுவிக்கப்பட்ட டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், அனுமதி மறுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை நியாயப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு, “பிரதமர் வீட்டு முன்பும், சோனியா காந்தி வீட்டு முன்பும் அண்மையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் ஒரு அமைச்சரும் தாக்கப்பட்டார். அதற்கு அனுமதி வாங்கவில்லை. அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்காரர்கள் ரயிலை மறித்தும், சாலைப் போக்குவரத்தை மறித்தும் மறியல் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
அதற்கு அனுமதியா வாங்குகின்றனர்? அவர்களை எல்லாம் அனுமதித்துவிட்டு, இந்த அரசு திட்டமிட்டு என்னை கைது செய்து, சிறையில் அடைத்து, பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தூண்டிவிட்டு தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி, இது எல்லாவற்றையும் செய்வது பா.ம.க.வினர் என்று மக்களிடம் பழி கூற திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஏன் என்றால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கெனவே கம்யூனிஸ்ட்களும், ம.தி.மு.க.வும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்த்துக் கொண்டு தலித் ஓட்டுகளையும் பெற்று 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா வெற்றி பெறலாம் என்று நினைத்திருக்கிறார்.” என்று எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விதண்டா வாதத்தினை டாக்டர் ராமதாஸ் முன் வைத்தது அபத்தத்தின் சிகரமாகவே உள்ளது. அனுமதி வாங்காமல் போராட்டம் நடத்தப்பட்டு ஓர் அமைச்சர் புது டெல்லியில் தாக்கப்பட்டார் என்று சொல்லி பாட்டாளி மக்கள் கட்சியினரை டாக்டர் ராமதாஸ் தூண்டி விடுகிறாரா? பத்திரிகையாளர்களிடம் மேலும் கூறுகையில், “தமிழ்நாட்டில் நடக்கும் கலவரங்கள் அனைத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக அரசு, காவல் துறை இவை மூன்றும் தான் காரணம். பா.ம.க. எந்த வன்முறை செயலையும் செய்யாது” என்று கூறுவதன் மூலம் பா.ம.க.வினர் நிகழ்த்திய வன்முறைகளிலிருந்து தப்பித்துவிடலாம் என்று டாக்டர் ராமதாஸ் நினைக்கிறார்.
இதைப் போன்று என் மீதும், தமிழக அரசின் மீதும், காவல் துறை மீதும் அவதூறுகளைப் பரப்பி வரும் டாக்டர் ராமதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர் மீது அரசின் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும். “சிறையில் இருந்து வெளியே சென்ற உங்கள் தொண்டர்களுக்கு என்ன அறிவுரை சொல்லப் போகிறீர்கள்?”” என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “இது போன்ற அடக்குமுறைகளை கண்டு நானும் எனது தொண்டர்களும் சோர்வடைய மாட்டோம். ஆகவே, நீங்கள் எல்லாம் அமைதி காக்க வேண்டும்“ என்று சொல்லி உள்ளார் டாக்டர் ராமதாஸ்.
பெட்ரோல் குண்டுகளை வீசுவதிலும், கல் எறிவதிலும், பொதுச் சொத்துக்களையும், தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்துவதிலும், அப்பாவிகள் உயிர் இழக்கச் செய்வதிலும் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதிலும் சோர்வு அடைய மாட்டோம் என்கிறாரா? டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் “போராட்டம் தொடரும்” என்று சொல்வதன் மூலம் தங்கள் கட்சியினரை மேலும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடவே தூண்டி விடுகிறார்கள். 
எனவே தான் டாக்டர் ராமதாஸ் பிணையில் வெளி வந்த பின்பும் பாட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறை தொடர்ந்து நடைபெறுகிறது. நேற்றும் பேருந்துகள் மீது கல் வீசி உள்ளனர். வாகனங்கள் சேதப் படுத்தப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளின் கண்ணாடிகள் தாக்கப்படுவதால் பேருந்துகளின் முன் கண்ணாடி உடைந்து ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதால் பேருந்து ஓட்டுனர்களுக்கு தலைகவசம், வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைத்து வகையிலும் பாடுபடக் கூடிய தாகவும்,பொதுமக்களின் நலனை முன் வைத்து செயல்படக் கூடியதாகவும், மற்ற அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக விளங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு பொருள் குறித்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமெனில், அதனை ஜனநாயக ரீதியாக, அறவழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். எதிர்ப்பை வன்முறை மூலம் தெரிவிப்பது என்பது எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது. மேலும், கட்சியினரை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதுடன், அவர்களை சமுதாயத்தின் முன்னேற்றப் பாதையில் அழைத்து சென்று, சட்ட விரோதச் செயல்கள் எதிலும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வது கட்சி தலைவர்களின் பொறுப்பும், கடமையும் ஆகும்.
அரசியல் கட்சிகளுக்கு உள்ள இந்த பொதுவான இலக்கணங்களுக்கு மாறாக, பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில தினங்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் ஊறு விளைவித்தல், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்தல், அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபடுவதை எனது அரசு ஒரு போதும் சகித்துக் கொள்ளாது.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களை தூண்டுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு கணக்கிடப்பட்டு, அந்த இழப்பை 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சியினரிடம் இருந்து நஷ்ட ஈடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறைச் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியை தடை செய்ய இந்த அரசு தயங்காது, நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று ஜெயலலிதா பேசினார்.

nakkheeran thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக