பதிவு செய்த நாள் -
ஏப்ரல் 28, 2013 at 11:23:13 AM
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் தொடர்கிறது. சிவகாசி அருகே நாரணபுரத்தில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ரத்னா பட்டாசு தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால், ஒப்பந்த தொழிலாளர்கள் 8 பேர் தொழிற்சாலைக்கு வெளியே மரத்துக்கு அடியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிவகாசி பட்டாசு ஆலைகளில் தீவிபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகிவிட்டன. இன்றும் 3 பேர் பலியான நிலையில், தீ விபத்துக்களைத் தடுக்க போதுமான மாற்றங்கள் கள அளவில் நடந்திருக்கின்றதா என்பது பற்றிய விவரங்கள்:-
இந்தியாவின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி, எப்போதும் பரபரப்பான தொழிற்பேட்டை. ஆண்டுமுழுவதும் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் பரபரப்பாக இருக்கும் இந்த பணியாளர்களுக்கு விபத்துக்கள் எமனாக மாறிவிடுகின்றன.
கொண்டாம்பட்டி பகுதியில் நேற்று ஏற்பட்ட விபத்து மூன்று பணியாளர்களின் உயிரை பறித்தது. பட்டாசு தயாரிக்கும் போது விபத்தை தடுக்கவும், அவசர உதவிக்கும், தேவையான மருத்துவமனை, தரமான சாலைகள் ஆகியவை எதிர்நோக்கி காத்திருக்கிறது இந்த கொண்டாம்பட்டி நகரம்.
கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதலிப்பட்டியில் நடந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அமைக்கப்பட்ட மத்திய ஆய்வுக்குழு சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகள் முக்கியமான பிரச்னைகள் கவனிக்கப்படாமலிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது.
பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் குறித்த கணக்குகள் இல்லை. ஒவ்வொரு ஆலையிலும் எத்தனைபேர் பணிபுரிகிறார்கள் என்ற வருகை பதிவு இல்லை .உரிமம் ஒருவரது பெயரில் இருக்கிறது, ஆனால் வேறு ஒருவர் அதனை நடத்துகிறார். தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்பாட்டை யாரும் தடுக்கவில்லை. பெரும்பாலான பட்டாசு தயாரிப்பு அறைகளுக்கு நடுவில் விதிகளுக்கு புறம்பாக பட்டாசுகள் உலர வைக்கப்பட்டிருந்ததாக அந்த குழுவில் இடம்பெற்றிருந்த தடயவியல் துறை அறிஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சிவகாசி மற்றும் சுற்றியிருக்கும் பகுதிகளில் போதுமான அளவு தீ தடுப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதே போல், பணியாளர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்படவேண்டும். தேவைப்படும் இடங்களில் சாலைவசதி, அதிக எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ்கள், அருகிலேயே மருத்துவமனைகள் இவையெல்லாம் தான் சிவகாசியின் உடனடி தேவைகள். அரசு இதை செய்ய வேண்டிய நேரம் இதுவாக உள்ளது.
http://puthiyathalaimurai.tv/ thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக