
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசு பணியார் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில், முதன்மைத் தேர்வைத் தமிழில் எழுதுவதற்குக் கட்டுப்பாடுகள் விதித்ததை ரத்து செய்யுமாறு, மத்திய அரசுக்கு தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்து உள்ளோம். இந்தநிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமும், தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டு இருந்த முக்கியத்துவத்தைக் குறைத்து இருப்பது வேதனை தருகிறது.
தமிழ்நாடு அரசு பணிகளில் காலி இடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களில் மாற்றம் செய்து அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது. இதன்படி மாற்றி அமைக்கப்பட்டு உள்ள புதிய பாடத்திட்ட முறையில், குருப்-2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, குரூப்-4 தேர்வுக்கான பொதுத் தமிழ் பகுதியில் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத் திட்டத்தில், வங்கி தேர்வு மற்றும் யு.பி.எÞ.சி., தேர்வுகள் போன்று அறிவுக்கூர்மை, சிந்தனைத் திறன் தேர்வுகள், பொது அறிவு மற்றும் கிராம நிர்வாகம் போன்ற பாடங்கள் இடம் பெற்று உள்ளன. தமிழ் வழியில் படித்த கிராமப்புற மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
இதனால், ஆங்கிலப் புலமை மற்றும் பொது அறிவு பெற்று உள்ளவர்கள் மட்டுமே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, தமிழ் மொழியில் கல்வி பயிலாமலேயே பட்டப் படிப்பை முடிக்கக்கூடிய நிலை இருக்கிறது.
அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழியை ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழியாக ஆக்க வேண்டும், தமிழ்வழிக் கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கும்போது, தமிழ்நாட்டில், தமிழில் படித்தால் வேலை வாய்ப்பு இருக்காது என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் புதிய பாடத்திட்டங்களைப் புகுத்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ் மொழிக்கு உரிய உரிமை மற்றும் முக்கியத்துவத்தைத் தக்க வைக்கவும், தமிழ் மொழியில் பயின்ற கிராமப்புற மாணவர்கள் பயன்பெறவும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் போட்டித் தேர்வுகளில் கொண்டு வந்து உள்ள புதிய பாடத்திட்ட முறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
tamilcloud thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக