கண்ணூர், -
சவுதி அரேபியாவில் வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு உதவும் என்று மத்திய மந்திரி கே.சி.வேணுகோபால் உறுதி அளித்தார்.
வேலை இழப்பு
சவுதி அரேபியாவில் ‘நிதாகத்’ என்ற சட்டத்தை அமல்படுத்துவதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது. 10 பேருக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில், 10 சதவீத பணியிடங்கள் சவுதி அரேபியர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது.அப்படி ஒதுக்கப்படாத நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டினரின் பணி உரிமம் ரத்து செய்யப்படும்.இதன்படி, 2½ லட்சம் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டினர் பணிஉரிமம் இழந்துள்ளனர். அவர்கள் தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி திரும்பாவிட்டால், அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது.இச்சட்டத்தால், வேலை இழந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
மத்தியஅரசு உறுதி
இந்நிலையில், அவர்கள் நாடு திரும்ப உதவுவதாக மத்தியஅரசு உறுதி அளித்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சிவில் விமான போக்குவரத்து ராஜாங்க மந்திரி கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:–சவுதி அரேபியாவில் வேலை இழந்த இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வர மத்தியஅரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். அவர்களின் பயண பிரச்சினைகளுக்கு தீர்வு காண சவுதி அரேபிய தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பண பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு விசேஷ கவனம் செலுத்தும்.
ஒற்றுமை
இந்தியர்களை அழைத்து வருவதற்காக, வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத்துறையும், வெளியுறவுத்துறையும் ராஜரீக முறையில் தேவையான நடைமுறைகளை பின்பற்றும். மேற்கண்ட இரு துறைகளின் ராஜாங்க மந்திரிகளும் இப்பணியை செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினையை ராஜரீக முறையில் தீர்க்க மத்திய மந்திரிகளிடையே ஒற்றுமை அவசியம்.இதை உணர்ச்சிகரமான பிரச்சினையாக கருத முடியாது. இருப்பினும், இப்பிரச்சினையை கையாள மத்திய அரசு எச்சரிக்கையுடன் தலையிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
dailythanthi. thaks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக