வாஷிங்டன்
போர் ஆயத்த நிலையில் உள்ள வடகொரியாவுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. ‘‘எந்தவொரு நெருக்கடியையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’’ என அமெரிக்கா அறிவித்துள்ளது.
போர்ப்பதற்றம் அதிகரிப்பு
கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவின் நடவடிக்கைகளால் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு தொலைதூர இலக்கை தாக்குகிற ஏவுகணையை ஏவி வடகொரியா வெற்றி கண்டது. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குகிற ஏவுகணையும் அந்த நாடு தயாரித்து வருகிறது. இதனால் தென் கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச வல்லுனர்கள் கருதுகின்றனர்.
3 முறை அணுக்குண்டு சோதனை நடத்தியுள்ள வடகொரியா போர் மூண்டால், அணு ஆயுதத்தை பயன்படுத்தும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. வடகொரியாவுக்கு எதிரான ஐ.நா. சபையின் பொருளாதார தடை நடவடிக்கைகள் அந்த நாட்டை ஆத்திரத்துக்கு ஆளாக்கி இருக்கிறது.
போருக்கு தயார்
அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் எதிராக வட கொரியா போர் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டின் பீரங்கிப்படைகளும், ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே தென் கொரியாவுடனான ராணுவ தொலைதொடர்பு வசதியை (ஹாட்லைன்) வடகொரியா நேற்று துண்டித்தது. முன்னதாக தென் கொரியாவுடன் வடகொரிய அதிகாரி பேசும்போது, ‘‘தற்போதைய நிலையில் எந்த கணமும் போர் மூளலாம். எனவே வடகொரியா–தென்கொரியா ராணுவ தொலைதொடர்புக்கு அவசியமில்லாமல் போய்விட்டது’’ என கூறினார்.
தென்கொரிய அதிபருக்கு எச்சரிக்கை
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக செஞ்சிலுவை சங்கத்துடனான தொலை தொடர்பு வசதியையும் வட கொரியா துண்டித்துக்கொண்டது நினைவுகூரத்தக்கது. அந்த நிலையில் இப்போது தென்கொரியாவுடனான தொலைதொடர்பு வசதியை துண்டித்திருப்பது போர்ப்பதற்றத்தை மென்மேலும் அதிகரித்துள்ளது.
தென்கொரிய பெண் அதிபர் பார்க்கிற்கும் வடகொரியா எச்சரிக்கையும் விடுத்துள்ளது. தனது நாவை அவர் கண்காணித்துக்கொள்ள வேண்டும் என்ற வடகொரியா கூறி இருக்கிறது.
அமெரிக்கா கண்டனம்
இந்த நிலையில் வடகொரியாவின் மிரட்டலை சந்திக்க அமெரிக்காவும் தயார் நிலையில் உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக பென்டகனின் செய்தித்தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் நிருபர்களிடம் பேசுகையில், வடகொரியாவின் மிரட்டலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
அப்போது அவர், ‘‘எந்தவொரு நெருக்கடி நிலையையும் சந்திக்க அமெரிக்கா தயார் நிலையில் இருக்கிறது. அவர்கள் (வடகொரியா) கொரிய தீபகற்பத்தில் இப்படி மிரட்டல் விடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்களது மிரட்டல் யாருக்கும் உதவாது. எந்தவொரு சூழலிலும் பதிலடி கொடுக்க அமெரிக்கா தயார் நிலையில் உள்ளது’’ என கூறினார்.
dailythanthi thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக