First Published : 20 March 2013
மத்திய அரசின் நிதி மசோதா மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு செவ்வாய்க்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
வரும் நிதியாண்டுக்கான (2013-2014) மத்திய பட்ஜெட்டோடு சேர்த்து, 2013ஆம் ஆண்டுக்கான நிதி மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள ஏழாவது ஷரத்து முற்றிலும் பிற்போக்கானது. கூட்டாட்சி கோட்பாட்டுக்கு எதிரானது. இது எனக்கு மிகுந்த அதிருப்தியை அளித்துள்ளது.
இந்த ஷரத்தில் வருமானவரி சட்டத்தின் 40- வது பிரிவைத் திருத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள் மீது உரிமைக் கட்டணம், காப்புக் கட்டணம் போன்றவற்றை மாநில அரசு விதிக்கலாம். இது வருமான கணக்கு நிமித்தமாக கழித்துக் கொள்ளத்தக்கது. ஆனால், இந்த புதிய ஷரத்து, இது கழித்துக் கொள்ளத்தக்கது அல்ல என்பதை புகுத்த முற்படுகிறது.
மாநில அரசுகளின் வருவாயைக் குறைத்து அதன் அடிப்படையில் மத்திய அரசின் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தவும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்தவும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக மாநில அரசுகளின் பொருளாதார உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட முற்படுவது கூட்டாட்சி முறையை சிதைக்க வழிவகுக்கும். மாநில அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களின் வரவு-செலவுக் கணக்கு மத்திய கணக்கு தணிக்கைத் துறை அதிகாரியின் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, மாநில சட்டப் பேரவைகளும் இதை பரிசீலனைக்கு உட்படுத்துகின்றன. எனவே, எந்த வகையில் பார்த்தாலும் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள திருத்தம் ஏற்கத்தக்கது அல்ல.
எனவே, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்பாக 2013-ம் ஆண்டுக்கான நிதி மசோதாவில் இடம்பெற்றுள்ள ஏழாவது ஷரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோருகிறேன். இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டுமென தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
dinamani thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக