ராமேசுவரம், -
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதை தடுத்தபோது கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசி போலீசாரை தாக்கினர். இதனால் துப்பாக்கிசூடு நடத்தி கும்பல் விரட்டியடிக்கப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டில் மோதல்
ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் உள்ள சந்தியாகப்பர் ஆலயம் அருகே நேற்று பகல் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதைத்தொடர்ந்து ஒருவரை ஒருவர் அடிதடியில் ஈடுபட்டனர்.இதுபற்றி அவர்களுக்குள் செல்போனில் தகவல் தெரிவித்ததன் பேரில் இருதரப்பையும் சேர்ந்த ஆதரவாளர்கள் கும்பலாக அங்கு வந்தனர். கோஷ்டிகளாக அவர்கள் திடீரென்று மோதிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.அங்கிருந்து அவர்கள் சிறிது தொலைவில் உள்ள ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தனர். அங்கும் அவர்கள் ஆயுதங்களால் மோதிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
போலீசார் விரைந்தனர்
அப்போது அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், மகேஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் விரைந்து வந்தனர்.கடந்த 22–ந்தேதி ஆட்டோ டிரைவர்கள் இடையே ஏற்பட்ட மோதலையொட்டி ஏற்கனவே ராஜபாளையம் பட்டாலியனில் இருந்து வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கோஷ்டிகளாக மோதிக் கொண்டவர்களை தடுத்து விரட்டியடித்தனர். இதில் ஒரு தரப்பினர் தங்கச்சிமடம் பகுதி வரை விரட்டியடிக்கப்பட்டனர்.
கற்கள், பெட்ரோல் குண்டுகள் வீசினர்
இதற்கிடையே மற்றொரு தரப்பைச் சேர்ந்த பெண்கள் ரோட்டில் உட்கார்ந்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஏராளமான ஆண்கள் பலர் கைகளில் ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர்.இதைப்பார்த்ததும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் விரட்டியடிக்க முயன்றனர். ஆனால் ரோடு போடுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த சரளைக் கற்களை எடுத்து வீசி போலீசாரை அந்த கும்பல் தாக்கியது. பெட்ரோல் குண்டுகளையும் வீசினார்கள்.இதில் தங்கச்சிமடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் போஸ், ராஜபாளையம் பட்டாலியனைச் சேர்ந்த போலீசார் கோகுலகிருஷ்ணன், காத்தணன் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். போலீஸ் வேன் உள்ளிட்ட வாகனங்களும் கல்வீச்சில் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
துப்பாக்கிசூடு
இதைத்தொடர்ந்து துப்பாக்கிசூடு நடத்த துணை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். உடனே போலீஸ்காரர் நாராயணன் என்பவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 2 ரவுண்டு சுட்டார். இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து சிதறி ஓடியது.இந்த சம்பவத்தால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.மோதல் நடந்த தங்கச்சிமடம் சந்தியாகப்பர் ஆலய பகுதியில் உள்ள சவுக்குத்தோப்புக்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் அங்கு கத்தியுடன் பதுங்கி இருந்த ஒருவர் உள்பட 12 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடைகள் அடைப்பு
கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் யாரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்து சேரவில்லை என்பதால் அவர்களை பற்றிய விவரம் தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் தங்கச்சிமடம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலைமை சீரானபின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அங்கு வழக்கம் போல் போக்குவரத்து தொடங்கியது.
போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் நிருபர்களிடம் கூறியதாவது:–தங்கச்சிமடம் பகுதியில் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றி கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்து அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலை தடுத்தபோது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போனதால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.இந்த மோதலில் ஈடுபட்டது தொடர்பாக 12 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதியில் போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பொதுமக்கள் கோரிக்கை
ராமேசுவரம் பகுதி பதற்றமான பகுதி என்பதால் முன்பு பட்டாலியன் பிரிவு போலீசார் பாதுகாப்பு பணிகளில் எப்போதும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் திடீரென்று இந்த பிரிவினர் விலக்கி கொள்ளப்பட்டனர்.இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதால் ஏற்கனவே இருந்தது போல் பட்டாலியன் பிரிவு போலீசாரை ராமேசுவரத்தில் எப்போதும் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
dailythanthi. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக