ராமேசுவரம்,மார்ச்.- 30 - இலங்கை சிறையில் உள்ள 19 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மத்திய அரசுக்கு எதிராக ராமேசுவரம் மீனவர்கள் இன்று(சனிக்கிழமை) ரெயில் மறியல் பேராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த 13-ந் தேதி மீன்பிடிக்க சென்ற 4 படகுகளையும், 19 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்த இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைத்துள்ளது. இந்த மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை
எடுக்கும் என்று மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்காரணமாக நேற்று முன்தினம் தலைமன்னார் கோர்ட்டில் 15 நாள் சிறைகாவலுக்கு பின்னர் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் அனைவரையும் நீதிபதி ஏப்ரல் 11-ந் தேதிவரை சிறைகாவலில் வைக்க உத்தரவிட்டார். இதனால், ராமேசுவரம் மீனவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து மத்திய அரசுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை ராமேசுவரம் துறைமுக டோக்கன் அலுவலகத்தில் அனைத்து மீனவர் சங்க அமைப்புகளின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட மீனவர் சங்க தலைவர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், இன்று(சனிக்கிழமை) மாலை 4மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை தங்கச்சிமடம் பகுதியில் மறியல் செய்வது என்றும். இதில் அனைத்து மீனவர்களும் திரளாக சென்று கலந்து கொண்டு மத்தியஅரசிற்கு தங்களின் கண்டனத்தையும், மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், மீனவர் சங்க பிரதிநிதிகள் உள்பட ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.
thinaboomi THANKS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக