நேற்று மதியம் 1.30 மணியளவில் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி பால் லாரி ஒன்று வந்தது. இதனை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராஜா (45) ஓட்டி வந்தார். மேற்பார்வையாளர் ஒருவரும் லாரியில் இருந்தார். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதன் பின்னால் தனியார் பஸ் ஒன்றும் 40 பயணிகளுடன் வந்தது.
தேசிய நெடுஞ்சாலையில் சப்படி பேருந்து நிறுத்த பகுதியில் வேகமாக வந்த பால் லாரி, அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பால் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. அரசு பஸ் பக்கவாட்டில் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த தனியார் பஸ், அரசு பஸ் மீது மோதி சாலையோரம் உள்ள 7 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த பயங்கர விபத்தில் பால் லாரியின் முன்பகுதி நொறுங்கியது. பால் லாரி டிரைவர் ராஜா, லாரியில் இருந்த மேற்பார்வையாளர் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அரசு பேருந்துக்குள் ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தனர். பேருந்துகளில் பயணம் செய்தவர்களில் 40 பயணிகள் படுகாயமடைந்தனர்.
விபத்தை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த நேரத்தில் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உணவு இடைவேளைக்காக அருகில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டலுக்கு வந்திருந்தனர். அவர்களும் ஓடி வந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்களில் 16 பேர் ஓசூர் அரசு மருத்துவமனைக்கும், 24 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பால் டேங்கர் லாரி டிரைவர் ராஜா, மேற்பார்வையாளர் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவலறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ராஜேஷ், எஸ்பி செந்தில் குமார், டிஎஸ்பி கோபி, சூளகிரி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஹட்கோ இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணி மேற்கொண்டனர். விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
tamilkurinji thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக