
புதுடெல்லி:பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான
அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் கடந்த
டிசம்பர் மாதம் 23 வயது கல்லூரி மாணவி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுக்
கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டங்களைக்
கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க
நீதிபதி வர்மா குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு அளித்த பரிந்துரைகளின்
அடிப்படையில் ஓர் அவசரச்சட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம்
டெல்லியில் வெள்ளிக்கிழமை கூடி விவாதித்தது. அப்போது, பெண்களுக்கு எதிரான
குற்றங்கள் தொடர்பான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய தண்டனைச்
சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில்
திருத்தங்களைச் செய்ய இந்த அவசரச் சட்டம் வழிவகை செய்கிறது. அடுத்ததாக, அவசரச்
சட்டத்தைப் பிறப்பிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்ய
உள்ளது.
இந்த அவசரச் சட்டத்தில், பலாத்காரம் என்ற
வார்த்தைக்கான விளக்கத்தை பாலியல் தாக்குதல் என்ற வார்த்தைக்கு மாற்றுதல், பாலியல்
பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிக்கு தண்டனையை 7 ஆண்டுகளில் இருந்து அவரது
ஆயுள்காலம் வரை என்று மாற்றுதல், ஆசிட் வீசுவதைத் தனிக் குற்றமாக மாற்றி அதற்குக்
குறைந்தபட்சம் 10 ஆண்டு முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிப்பது உள்ளிட்ட
மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
.thoothuonlinethanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக