- Wednesday, 27 February 2013 10:02
நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட், மகிழ்ச்சியும் ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்டாக இருந்தது என்று கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை :
மத்திய அரசின் இந்த ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுமோ என்ற அச்சத்தோடு எதிர்பார்த்திருந்த நிலையில், பயணிகள் கட்டணம் உயர்வில்லை என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை 14 புதிய ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நான்கு புதிய வழித் தடங்கள் தொடங்கப்படவுள்ளன. ஆறு புதிய வழித் தடங்களுக்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் இந்த நிதியாண்டிற்குள் நடைமுறைக்குக் கொண்டு வரத்தக்க வகையில் தேவையான நிதியினை ரெயில்வே அமைச்சகம் ஒதுக்கிட வேண்டும். சென்ற ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தமிழகத்திற்கான புதிய ரெயில்கள் இன்னும் இயக்கப்படாமல் இருப்பது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. சரக்கு கட்டணம் 5.8 சதவிகிதம் அதிகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. வியாபாரிகளையும், தொழில் செய்வோரையும் அது பெரிதும் பாதிக்கும். அது போலவே முன்பதிவு, தட்கல்கட்டணம் அதிகரிக்கப்பட விருப்பதும் மக்களைப் பாதிக்கும்.
இந்த நிதியாண்டில் ஒரு லட்சத்து ஐம்பத்திரண்டாயிரம் காலி பணி இடங்களை நிரப்ப முடிவு செய்திருப்பதாக அறிவித்திருப்பதும், பணியிடங்களை நிரப்புவதில் பத்து சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படுமென்று அறிவித்திருப்பதும் வரவேற்கத் தக்கவை.
தாம்பரத்திலும், ராயபுரத்திலும் முனையங்கள் அமைக்கப்படுமென்று ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டும் அந்த அறிவிப்பினை நிறைவேற்றக் கூடிய வகையில் நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யாததால் அந்த அறிவிப்பு அப்படியே கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது.
செங்கற்பட்டுக்கும் திருச்சிக்கும் இடையே இரட்டைப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் தராததும் மின்மய மாக்கலில் தமிழகம் பெருமளவுக்குப் புறக்கணிக்கப் பட்டிருப்பதும் ஏமாற்றம் அளிக்கிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஒவ்வொரு முறையும் அறிவிக்கப்படுவதும், அவை நிறைவேற்றப்படாததும் மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. மொத்தத்தில் இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட் தமிழகத்தைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் கலந்து தருகின்ற பட்ஜெட் என்றே கூற வேண்டும்.
- இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக