- Saturday, 02 February 2013 15:42

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பில் இஸ்லாமிய அமைப்புக்களுடன், நடிகர் கமல்ஹாசன் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது.
படத்தின் 15 காட்சிகளை நீக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புக்கள் கோரியிருந்ததாகவும், அதில் 7 காட்சிகளை நீக்குவதற்கு கமல் இணக்கம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து சமரச உடன்பாட்டின் கீழ் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இருந்த எதிர்ப்பை கைவிடுவதாக இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அதே போன்று கமல்ஹாசனும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐந்து மணித்தியாலங்கள் சென்னையில் இச்சந்திப்பு நடைபெற்றது. அரசு இந்த சந்திப்பை ஒழுங்கு படுத்திக்கொடுத்தமைக்கும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார்.
மேலும், எந்தெந்த காட்சிகள் நீக்கம் செய்யப்படுகின்றன என தெரிவிக்க மறுத்துவிட்டதுடன், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம் குறித்து தணிக்கை குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவுறுத்தப்படும் என்றார்.
தொடக்க காட்சிகளில், 'இது உண்மை தொகுப்பு' என்பது இப்படம் 'முழுக்க கற்பனையே' என மாற்றம் பெறுவதாகவும் இஸ்லாமிய அமைப்பினர் கேட்ட சில காட்சிகளின் ஒலி நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டு திகதியை விரைவில் அறிவிப்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரும் பேசி ஒரு முடிவுக்கு வருவதுடன், ஆட்சேபணைக்குரிய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டால் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னர் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்தது போன்று தமிழக அரசு தடையை நீக்கினால் மாத்திரமே திரையரங்குகளில் உடனடியாக படம் காட்சிக்கு வரும் என்பது குறிப்பிடட்தக்கது.
இதேவேளை நேற்று முதல் ஹிந்தியில் வெளியாகியுள்ள விஸ்வரூபத்திற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றிருக்கிறது. லக்னோவில் மாத்திரம் சிறிய அளவிலான முஸ்லீம்களின் போராட்டம் நடைபெற்றுள்ளது. கொல்கத்தாவில் படம் திருப்திகரமான வரவேற்பை பெற்றுவருவதாகவும், இவ்வார இறுதி நாட்களில் அதிகமானோர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 1000 க்கு மேற்பட்ட திரையரங்குகளில் இந்தியா முழுவதும் படம் வெளியாகியிருக்கிறது.
.4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக