Last Updated : Thursday , 14th February 2013 09:48:14 PM
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேசுவத்தை சேர்ந்தவர், மீன்வளத்துறை அதிகாரி சாமிராஜ். இவருடைய மனைவி பிரேமா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களின் வீட்டில் கடந்த 25.11.2002 அன்று பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 16 பவுன் தங்கநகைகள் திருட்டுப்போயின.
இதுதொடர்பாக பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிராஜின் வீட்டில் வேலைபார்த்து வந்த கருப்பியை (வயது 45) சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் காவலில் இருந்த கருப்பி கடந்த 1.12.2002 அன்று அதிகாலை போலீஸ்நிலையம் பின்புறம் உள்ள வயர்லெஸ் டவரில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கருப்பியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும் மதுரை மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றிடிபேன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கே.என்.பாட்ஷா 6.9.2008 அன்று சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், ஏட்டுகள் ராஜாராம், சுப்பிரமணியன், கருணாநிதி, இருதயராஜ், அர்ச்சுனன், ரெங்காச்சாரி ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.
பரபரப்பான இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் சாகுல் அமீதுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அத்துடன், ராஜாராம், சுப்பிரமணியம், கருணாநிதி ஆகியோருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை, இருதயராஜுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை, அர்ச்சுனனுக்கு 6 மாதம் சிறைதண்டனை, ரெங்காச்சாரிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
இதில் அர்ச்சுனன், ரெங்காச்சாரி ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 6 பேரும் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது தூத்துக்குடியில் துணைபோலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். ராஜாராம் மதுரையில் சப்-இன்ஸ்பெக்டராகவும், ரெங்காச்சாரி எமனேசுவரத்தில் தலைமை காவலராகவும் பணியாற்றி வருகின்றனர். மற்றவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
tamilkurinji. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக