ஹலால் சான்றிதழை முற்றாக வாபஸ் பெற்றுக்கொள்வது,
இலங்கையில் உள்ள வெளிநாட்டு மத போதகர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானங்கள்
உட்பட முஸ்லிம்களுக்கு எதிரான 10 தீர்மானங்களை பொதுபல சேனா அமைப்பு இன்று
அறிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் ஹலால்
சான்றிதழை முற்றாக வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும், பிறக்கின்ற புதிய சிங்கள
புதுவருடத்தை ஹலாலற்ற பாற்சோறுடன் அனைவரும் கொண்டாட வேண்டுமெனவும் பொதுபல சேனாவின்
செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

மஹரகமயில் இன்று நடைபெற்ற வருடாந்த பொதுக்
கூட்டத்திலயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சுமார் 5 ஆயிரம்
பெளத்தர்கள் கலந்துகொண்டனர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பொதுபல சேனாவின் செயலாளர்,
இது ஒரு பெளத்த நாடு. மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியது பெளத்தர்களே. ஜனாதிபதி
பெளத்த மதத்துக்கே சொந்தம். இங்கு ஏனைய சிறுபான்மை மதத்தவர்கள் அதனை உணர்ந்து
நடந்துகொள்ள வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கைப் பெண்களை
வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்புவது நிறுத்தப்பட வேண்டும். இலங்கையில் பல
பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களின் உலமா சபைகளே காரணம். உலமாசபை அமைப்பை தடைசெய்ய
வேண்டும். முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தற்போது சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக
இருப்பதாக அங்கு பேசிய பௌத்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹலால் என்ற பிரிவினைவாதம் ஏற்பட்டுள்ளது. அது
மிகவும் பயங்கரமானது. இது இஸ்லாமிய அடிப்படை வாதத்தை நாட்டில் வளர்க்கிறது. அதனை
இலங்கையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா செயற்படுத்தி வருகிறது. அதற்குரிய நிதியை
சவூதி அரேபியா வழங்கி வருகிறது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு சில அரசியல்வாதிகளும்
துணை போகின்றனர்.
அதனால் நாம் 10 பிரகடனங்களை இன்றைய தினம்
பிரகடனம் செய்வதாகக்கூறி அவற்றை வாசித்தார்.

குறித்த பிரகடனத்தில் ஹலால் சான்றிதழ் உடனடியாக
தடை செய்யப்படல் வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கப்பெரும் நிதி
மூலம் பள்ளிவாசல்களை நிர்மாணிப்பதை தடை செய்தல், சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள்
பிரவேசித்து மத போதனைகளில் ஈடுபடுவோரை மார்ச் 17ஆம் திகதிக்கு முன்னர்
வெளியேற்றுதல், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை தடை செய்தல்,
சிங்கள சனத்தொகை அதிகரிப்பில் உள்ள தடங்கல்களை நீக்குதல் போன்ற விடயங்கள்
உள்ளடக்கப்பட்டிருந்தன.
ஊடகவியலார்களுக்கு அச்சுறுத்தல்
பொதுபலசேனாவின் இந்த வருடாந்த பொதுக்
கூட்டத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற முஸ்லிம் செய்தியாளர் ஒருவர்
அச்சுறுத்தப்பட்ட நிலையில் மஹரகம பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டார். நவமணி
பத்திரிகைக்காக செய்தி சேகரிக்கச் சென்ற முஹம்மத் ரூமியே இவ்வாறு
தடுத்துவைக்கப்பட்டு 4 மணி நேரத்துக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க
சென்ற சர்வதேச செய்தி நிறுவனமான பி.பி.சி.யின் ஊடகவியலாளர் சார்ள்ஸ் ஹெலிலேண்ட்
அவரது உதவி தயாரிப்பாளர் அஸாம் அமீன் மற்றும் அந்த செய்திச் சேவையின் ஒளிப்பதிவாளர்
உள்ளிட்டோரை சிலர் சுற்றிவளைத்து தாக்குவதற்கு முயற்சித்துள்ளனர்.

மஹரகம நோலிமிட் நிறுவனத்தை பெளத்தர்கள்
தாக்கப்போவதாக தவறான செய்தியை வழங்குவதற்கு வந்துள்ளதாக அங்குள்ள பேரினவாத
அமைப்பைச் சேர்ந்த இளைஞர் அணி அவர்களை தாக்க முயற்சித்துள்ளனர். அத்துடன் அவர்கள்
சர்வதேசத்திற்கு தவறான செய்திகளை தெரிவிப்பதாகவும் அச்சுறுத்தியதோடு பொலிஸார்
விசாரணைகளையும் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
.thuruvam. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக