12 Jan 2013 
புதுடெல்லி:டெல்லியில் அதிகரித்து வரும் பாலியல்
வன்கொடுமை சம்பவங்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்று உச்ச
நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கவலை தெரிவித்தது.
தலைநகரில் அதிகரிக்கும் குற்றங்கள் தொடர்பாக
தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன்,
தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, “டெல்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த
எடுத்துள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசு, டெல்லி அரசு, தேசிய மகளிர் ஆணையம்
ஆகியவை இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்”என்று உத்தரவிட்டது.
டெல்லியில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியில் நான்காம்
ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர் நிபுன் சக்சேனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில்
பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு அனுமதித்து நீதிபதிகள்
கூறியது: “தலைநகரில் ஓடும் பஸ்ஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி பலியான
பிறகும் அதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி
நடைபெற்ற பாலியல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதால் இந்தப் பிரச்னைகள்
முடிந்து விட்டதாகக் கருதக்கூடாது. அதிகரிக்கும் குற்றங்கள், பாலியல் கொடுமைகள்
போன்றவற்றால் தில்லியில் பெண்களுக்கு பாதுகாப்புப் இல்லாத நிலை இருப்பதாக
உணருகிறோம். மோட்டார் வாகனச் சட்டத்தை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது எடுக்கும்
நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி தில்லி போக்குவரத்துத் துறை தெரிவிக்க வேண்டும்”
என்று நீதிபதிகள் கூறினர்.
.thoothuonline. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக