- Monday, 28 January 2013 13:56
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் ஆயிரக் கணக்கானோர் ஒன்று கூடி ஓரினக் கலப்புத் திருமணத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக சட்டம் இயற்றுபவர்கள் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடி விவாதம் நடத்தவுள்ளனர். இந்தப் பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்த பதாதைகளில் கவர்ச்சியான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
உதாரணமாக, 'உரிமைகளின் சமபங்கீடு என்பது அச்சுறுத்தல் அல்ல!, உங்களுக்கென்ன வேண்டும்? சமவுரிமை! எப்போது வேண்டும்? இப்போதே!' என்பவற்றைக் கூறலாம். இன்னொரு பதாதையில் பிரெஞ்சு அரசின் முத்திரையுடன் இரு ஓரினச்சேர்க்கையாளர்கள் முத்தமிடுவது போன்ற படத்தின் கீழ் பின்வரும் வாசகங்கள் பதியப்பட்டிருந்தன.
அதாவது, 'சுதந்திரம், சமவுரிமை, மற்றும் சகோதரத்துவம் என்பவையே எமக்குத் தேவை. அதிகமும் வேண்டாம்! குறைவும் வேண்டாம்!; என்பவையே அவை. மேலும் இந்தப் பேரணி சுமார் 125 000 பொது மக்களைக் கவர்ந்துள்ளதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். இது கடந்த வருடம் டிசம்பர் மத்தியில் நிகழ்த்தப் பட்ட இது போன்ற பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும். இருந்த போதும் இரு கிழமைகளுக்கு முன்னர் ஒரினக்கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் நகர வீதிகளில் பொது மக்கள் நிகழ்த்திய ஆர்ப்பாட்டப் பேரணியின் போது சுமார் 340 000 பொது மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பிரான்ஸ் அதிபரும் ஒரு சமூகநலன் விரும்பியுமான ஃப்ரான்கொயிஸ் ஹொல்லான்டே 2012 ஆம் ஆண்டு மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓரினக் கலப்புத் திருமணத்தை சட்டபூர்வமானதாக ஆக்குவேன் எனும் உறுதி மொழியைக் கொடுத்திருந்தார். மே 2012 ஆம் ஆண்டு இவர் பதவியேற்ற பின் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக