புதுடெல்லி:மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் இம்மாதம்
நடந்த வகுப்புக் கலவரத்தில் போலீஸின் பங்கினை நிரூபிக்கும் மேலும் பல புதிய வீடியோ
காட்சிகள் வெளியாகியுள்ளன. முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை கொள்ளையடிக்கும்
நபர்களுடன் இணைந்து போலீசும் ஈடுபடுவது தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
போலீசின் தலையீடே கலவரம் உருவாக காரணம் என்று சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மியின்
தலைமையிலான உண்மை கண்டறியும் குழு கண்டறிந்தது.
முஸ்லிம்களின் கடைகளை கொள்ளையடிக்கும் போலீஸ்
கடைகளில் உள்ள பொருட்களை கடத்திச் செல்வது வீடியோ காட்சிகளில் இடம்பெற்றுள்ளன. ஒரு
பெட்டிக் கடையை உடைக்க முடியாத போலீஸ் மீன் மார்க்கெட் அருகில் வீதிகளில்
நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், வீடுகளில் குடிநீரை
சேமிக்க வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் ஆகியவற்றை உடைக்கும் காட்சிகளும்
வீடியோவில் பதிவாகியுள்ளன. உள்ளூர் தொலைக்காட்சி சானலின் கேமராமேனும் கலவரத்தில்
பங்கேற்றதாக உடைக்கப்பட்ட கடையின் உரிமையாளர் கூறுகிறார்.
வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து போலீஸில்
வகுப்புவாதிகள் உள்ளனர் என்று மஹராஷ்ட்ரா மாநில முதல்வர் பிரதிவிராஜ் சவுகான்
கூறினார். வீடியோ காட்சிகள் கண்டதாகவும், இப்பிரச்சனையை தீவிரமாக எதிர்கொள்வதாகவும்
அவர் தெரிவித்தார்.
உணவுக் கடை நடத்துவோருக்கும் இரண்டு இளைஞர்களுக்கு
இடையே உருவான மோதலில் போலீஸ் சமயோஜிதமாக தலையிடாததே பிரச்சனைக்கு காரணமாகும். நீதி
விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், உண்மை வெளியாகும் என்றும் சவுகான்
கூறினார்.
வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளதாகவும், அதன்
அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்றும் டி.ஜி.பி சஞ்சய் தயாள் தெரிவித்தார்.
வன்முறைகள் தொடர்பாக போலீஸ் கான்ஸ்டபிள்களான சுமித் நாம்தொயோ தாக்கூர், பிரமோத்
சிவன் இஷி ஆகியோரை இம்மாதம் 18-ஆம் தேதி வரை போலீஸ் சஸ்பெண்ட் செய்துள்ளது. வன்முறை
சம்பவங்கள் தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளதாக கூடுதல் டி.ஜி.பி அஹ்மத்
ஜாவேத் தெரிவித்தார்.
கலவரத்தில் போலீசாரின் பங்கு வெளியானதை தொடர்ந்து
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிவில் உரிமை ஆர்வலர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஹராஷ்ட்ரா போலீஸில் 1992-93 காலக்கட்டத்தில் நடந்த
கலவரம் குறித்து விசாரணை நடத்திய ஸ்ரீகிருஷ்ணா கமிஷனிடம் கூடுதல் கமிஷனர்
வி.என்.தேஷ்முக் கூறியது என்னவெனில், அக்கலவரம் நடந்த காலக்கட்டத்தில் போலீஸில் 80
சதவீத கான்ஸ்டபிள்களும் சிவசேனாக்காரர்கள் ஆவர் என்பதாகும். துலே கலவரம் தொடர்பான
வீடியோ காட்சிகள் போலீஸ் வகுப்புவாத மயமாக்கத்திற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும்,
இவ்விவகாரத்தில் அரசு தீவிரமாக தலையிடவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
அரசியல் சாசன ரீதியான கடமையை நிறைவேற்றுவதில்
சட்டமியற்றுவோரும், போலீஸும் தோல்வி அடைந்ததற்கான ஆதாரம் தான் வீடியோ காட்சிகள்
என்று பிரபல இயக்குநரும், சமூக ஆர்வலருமான மகேஷ் பட் கூறியுள்ளார். அரசியல் சாசன
தத்துவங்களை அமல்படுத்த வேண்டியவர்கள் அசுத்தமடைந்துள்ளனர். கலவரங்களில்
பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு
அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஆறு முஸ்லிம்கள் கொல்லப்பட்ட
பிறகும், போலீஸின் தன்னம்பிக்கை கெட்டுவிடும் என கருதி போலீசை விமர்சிக்க அரசு
தயாராகவில்லை. போலீஸ் மனநிலையை சரிப்படுத்த அரசு தலையிடவேண்டிய நேரம் இது என்று
மகேஷ் பட் கூறியுள்ளார்.
வீடியோ காட்சிகள் அதிர்ச்சி ஏற்படுத்துவதாகவும்,
அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தில் இவ்விவகாரத்தை கிளப்புவோம் என்றும் அப்பகுதி
எம்.எல்.ஏ அனில் கோட்டே கூறினார். வீடியோ காட்சிகளில் கண்ட அனைத்து போலீஸ்
காரர்களையும் சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்று சிறுபான்மை கமிஷன் தலைவர் முனாஃப்
ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
.thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக