Thursday, 31 January 2013 18:04
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலது கரம் என கூறப்படுபவரும், திமுக செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ், மர்ம நபர்களால் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மு.க.அழகிரியின் வீடு இருக்கும் சத்ய சாய் நகர் - பொன்மாரி நகர் பகுதியில் இரவு 8 மணி அளவில் அவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். பதற்ற நிலையை கருத்தில் கொண்டு மதுரை நகர் பொலிஸாரால் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.
மினிவேனில் வந்த மர்ம கும்பல் காரை வழிமறித்து பொட்டு சுரேஷை சரமாரியாக வெட்டித்தள்ளியுள்ளது. இதில் பொட்டுசுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார் என்பது குறித்து இன்னமும் தகவல் எதுவும் வெளியாகவில்லை. காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பொட்டுசுரேஷ் மீது கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் முன்னர் பதியப்பட்டிருந்தன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நில அபகரிப்பு புகார் தொடரில் 6 மாதத்திற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவையடுத்து வெளியே வந்திருந்தார்.
சிறையிலிருந்து விடுதலையானதும் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்க போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று மு.க.அழகிரியின் பிறந்த தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் அட்டாக் பாண்டிக்கும், பொட்டு சுரேஷுக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே உட்கட்சி பூசல் அல்லது, தொழில் பேட்டி இக்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
4tamilmedia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக