ஜனவரி 07, 2013 at 9:58:01 PM

போதைக்குக் கஞ்சா..
.
பொழுதுப்போக லேப்டாப்...
பிறருடன் பேசி மகிழ செல்போன்கள்...
இவையெல்லாம் ஏதோ நட்சத்திர விடுதியில்
தங்கியிருக்கும் நபருக்குக் கிடைக்கும் வசதிகள் அல்ல. வேலூர் மத்தியச் சிறையில்
அடைக்கப்பட்டிருக்கும் கைதி ஒருவர் சட்டவிரோதமாக அனுபவிக்க முடிந்த சலுகைகள்..
கடந்த அக்டோபர் மாதம் வேலூரைச் சேர்ந்த அரவிந்த்
ரெட்டி என்ற மருத்துவர் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரை கொலை செய்ய சிறையிலிருந்த
படியே சிலர் திட்டமிட்டிருப்பது தெரியவந்த போது, காவல்துறையே அதிர்ச்சியடைந்தது.
இதனையடுத்து, 300-க்கும் மேற்பட்டோர் அடங்கிய காவல் படையுடன், வேலூர் மத்தியச்
சிறையை அதிரடியாகச் சோதனையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட
கண்காணிப்பாளர் ஈஸ்வரன், உள்ளே இருக்கும் கைதிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதை
உறுதி செய்தார்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் கைதியைப் பார்க்கச்
சென்ற வழக்குரைஞர் ஒருவர், பக்கோடோ பொட்டலத்தில் கஞ்சாவை பதுக்கி எடுத்துச்
சென்றதாக கைது செய்யப்பட்ட சம்பவம், மாவட்டக் கண்காணிப்பாளர் ஈஸ்வரனின் கூற்றை
மேலும் உறுதிப்படுத்துவதாக இருந்தது.
மத்தியச் சிறை அமைந்துள்ள மாபெரும் வளாகத்தைச்
சுற்றிலும் மூன்றடுக்குப் பாதுகாப்பு... அடுத்ததாக இரண்டு பெரிய
மதில் சுவர்கள்...அதற்கடுத்து மின்சார வேலி ...இத்தனை கடுமையான பாதுகாப்புகளையும்
தாண்டி,உள்ளே இருக்கும் கைதிகளுக்கு இவையெல்லாம் எப்படிக்
கிடைக்கின்றன...அவர்களுக்கு உதவுவது யார்...?காசு கொடுத்தால் எல்லாம்
கிடைக்கும்.
குற்றவாளிகளைத் திருத்தும் இடங்களாகத் திகழ வேண்டிய
சிறைக் கூடங்கள், குற்றங்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளாக மாறிவருவதை
நீதித்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என வழக்குரைஞர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
கொலைக் குற்றங்களில் தொடர்புடைய பலர், வேலூர்
நீதிமன்றத்தில் விரும்பிச் சரணடைய, அங்கு அமைந்துள்ள மத்தியச் சிறையில்,
சட்டவிரோதமான அனைத்துச் சலுகைகளும் தடையின்றித் தாராளமாகக் கிடைப்பதே காரணம் எனவும்
வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.
உள்ளே திட்டம்.. வெளியே
கொலை...
வேலூரில் நடந்த இந்த கொலைகள்
மட்டுமல்ல, சமீபத்தில் சிறையில் உள்ள கைதிகளின் உத்தரவுப்படி வெளியே சில கொலைகள்
அரங்கேற்றப் பட்டிருக்கின்றன. மிகக்கொடூரமான முறையில் இந்த குற்றங்கள் நடத்தப்
பட்டிருக்கின்றன.
குழுமோதல்களை அடிப்படையாக கொண்ட இந்த கொலைகள்
சிறைக்குள் திட்டமிடப்பட்டவைதான் என்பது காவல்துறை அதிகாரிகளாலேயே ஒத்துக்
கொள்ளப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 1 - ஸ்ரீபெரும்புதூர் - திரைப்பட
தயாரிப்பாளரும் கவுன்சிலருமான குமரன், 20 பேர் கும்பலால் கொலை.
டிசம்பர் 5 - செங்குன்றம் - விசாரணை கைதி தேவராஜ்,
பேருந்தில் 15 பேர் கும்பலால் கொலை.
டிசம்பர் 8 - காஞ்சிபுரம் - விடுதலைச்சிறுத்தைகள்
கட்சியை சேர்ந்த அம்பேத்கர் வளவன், அவரது அலுவலகத்தில் கொலை.
ஜனவரி 1 - சென்னை பேசின் பாலம் அருகே, ரவுடி
ரஞ்சித் கொலை.
ஜனவரி 5 - சென்னையில், காமேஸ்வரன் என்ற ரவுடி 25
பேர் கொண்ட கும்பலால் கொலை.
கொலைக்களமாகும் வடசென்னை?
குற்றங்களின் மையப்புள்ளியாக வட
சென்னை காட்சியளிக்கிறது. புத்தாண்டிற்கு பிறகு நடந்த 3 கொலைச் சம்பவங்களை
ஆராய்ந்தால், ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த மோதல்கள் வெளிச்சத்துக்கு
வருகின்றன. அதே சமயம், காவல்துறையின் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதா என்ற
கேள்வியும் எழுகின்றது.
தமிழகத்தில் குற்றங்கள் அதிகம் நடக்கும்
மாவட்டங்களில் முதலிடத்தில் இருக்கிறது சென்னை. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 136
கொலைச் சம்பவங்கள் சென்னை காவல் எல்லையில் பதிவாகியிருக்கிறது.இதில் பாதிக்கும்
அதிகமான கொலைகள் வட சென்னையில் நடந்தவையாகும்.
இந்த கொலைகளில் அதிகமானவை ரவுடி கும்பல்களுக்கு
இடையில் நடந்த மோதல்களாகவே இருக்கின்றன. கடந்த சனிக்கிழமையன்று, வியாசர்பாடியில்
ரவுடி காமேஸ்வரன் எதிர்க்குழுவினரால் வெட்டிக்கொல்லப்பட்டார்.
குற்றவாளிகளை கண்காணிக்கிறதா
போலீஸ்?
சிறையில் இருக்கும்
குற்றவாளிகளின் செயல்பாட்டில் சந்தேகம் எழுந்தால் அதை கண்காணிக்கும் பொறுப்பு
அந்தந்த காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பு. இந்த கண்காணிப்பு பணிகளுக்கு பிரத்யேகமாக
இருக்கும் ஒ.சி.ஐ.யூ என்ற கண்காணிப்பு பிரிவின் பணி போதுமானதாக இல்லை என்ற
குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
சிறைகளிலிருந்து திரும்பிய குற்றவாளிகளை
குறைந்தபட்சம் 10 வருடமாவது கண்காணிக்க வேண்டும் என்கிறது சர்வதேச குற்றவியல்
அமைப்பு. ஆனால் நீதிவாங்கித்தரும் அமைப்புகள் இதற்கு தயாராக இல்லை.
கைதிகளும்.... கோணங்களும்....
சிறையில் இருந்தபடியே தனது
எதிரிகளை சதித்திட்டம் தீட்டிக் கொலை செய்யும் சம்பவங்களில் தொடர்புடைய கைதிகளுக்கு
அரசியல் பின்புலமும், காவல்துறையின் ஆதரவு இருக்கிறது என்பது மனித உரிமை
ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.
சிறையில் உள்ள ஒரு கைதி தவறான பாதையில்
செல்வதற்கும், திருந்தி நல்வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்
கொள்வதற்கும், அவரது தண்டனைக் காலம், முக்கிய காரணியாக அமையும் என்கின்றனர்
வழக்கறிஞர்கள்.
சிறையில் கைதிகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்,
வழக்கு விசாரணையில் ஏற்படும் கால தாமதம் என்று கூறும் மனித உரிமை ஆர்வலர்கள்,
காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்களின் கூட்டு முயற்சி இருந்தால், இதனைத்
தவிர்க்கலாம் என்கின்றனர்.
சிறைத் தண்டனை பெற்ற கைதிகள், விடுதலை பெற்ற
பின்னர் அவர்கள் சமூகத்தில் கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற தொழிற்பயிற்சிகள் தற்போது
அளிக்கப்பட்டாலும், அவை நவீனமானதாக இல்லை என்ற வாதமும் சமூக ஆர்வலர்களால்
முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, சமூகத்தில் அவர்களும் கண்ணியத்துடன் வாழ,
நவீன பயிற்சிகளை அளிப்பதன் மூலம் சிறைக் கைதிகளை நன்னடத்தை உள்ள சமூகப் பிரஜைகளாக
மாற்ற முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
puthiyathalaimurai.tv thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக