puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 23 மார்ச், 2013

ராமேசுவரத்தில் பயங்கர கலவரம் பெட்ரோல் குண்டுகள் வீச்சு; பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்


ராமேசுவரம்
ராமேசுவரத்தில் நேற்று 2 தரப்பினர் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டு பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசினர். வீடுகளுக்கும் தீ வைத்த அவர்கள் பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கினர். 4 மணி நேரத்துக்கு மேல் போர்க்களமான நிலையில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலை விரட்டி அடித்தனர்.

யாத்திரை பணியாளர்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தின் தீவு நகரமான ராமேசுவரத்தில் உலகப்புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலுக்குள் சரித்திர புகழ்வாய்ந்த தீர்த்த கிணறுகளில் அவர்கள் நீராடி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். ‘அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கம்’ என்ற அமைப்பை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர், பக்தர்களுக்கு இந்த தீர்த்தங்களில் தண்ணீரை எடுத்து ஊற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமேசுவரம் எம்.ஆர்.சி.நகர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் ‘ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி யாத்திரை பணியாளர் சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கினர். அவர்கள் தங்களுக்கும் தீர்த்தம் ஊற்றும் பணியை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு கொடுத்தனர்.
ஆனால் புதிய அமைப்புக்கு தீர்த்தத்திலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்ற அனுமதி அளிக்கக்கூடாது எனக்கூறி ஏற்கனவே இருந்தவர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
பயங்கர மோதல்
இந்த நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் ராமேசுவரம் வந்தார். அவர் ராமேசுவரம் கோவிலில் தீர்த்தக்கிணறுகளில் பக்தர்கள் நீராடுவதற்காக தண்ணீரில் நனையாத அடையாள வில்லை அணிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவரிடம் ‘ரிபெல்முத்துராமலிங்க சேதுபதி யாத்திரை பணியாளர் சங்கத்தினர்’ பக்தர்களுக்கு தீர்த்தமாட தண்ணீர் ஊற்றும் பணியை மேற்கொள்ள தங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை கொடுத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இவ்வாறான சூழ்நிலையில் நேற்று மதியம் கோவில் பகுதியில் இந்த பிரச்சினை தொடர்பாக ஆட்டோ டிரைவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அதில் ஒரு ஆட்டோ சேதப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மேட்டுத்தெருவை சேர்ந்த விநாயகமூர்த்தி என்ற ஆட்டோ டிரைவர், பக்தர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தனுஷ்கோடிக்கு சென்றார். அவர் வேர்க்கோடு சென்றபோது அங்கிருந்த மற்றொரு தரப்பு ஆட்டோ டிரைவர்களில் சிலர் விநாயகமூர்த்தியையும், மற்றும் ஒரு டிரைவரையும் பிடித்து வைத்து தாக்கி அடித்து உதைத்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் தங்கள் உறவினர்களுக்கும், மற்ற ஆட்டோ டிரைவர்களுக்கும் தகவல் கொடுத்தனர். போலீசாருக்கும் தகவல் பறந்தது. இதனையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையிலான போலீசார் வேர்க்கோடு பகுதிக்கு விரைந்தனர்.
பக்தர்கள் ஓட்டம்
அதற்குள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரிவாள், கம்புகளுடன் ராமேசுவரம் கீழவாசலில் இருந்து வடக்குவாசல், மேலவாசல், நடுத்தெரு, கடைத்தெரு பகுதிகளுக்குள் சென்று கடைகளை அடைக்குமாறு கூறி சத்தம் போட்டுக்கொண்டே வந்தனர்.
பதற்றம் ஏற்பட்டதால் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். அந்த பகுதியில் இருந்த பக்தர்களும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியில் அலறி அடித்துக்கொண்டு எங்கு ஓடுவது என தெரியாமல் ஓட்டம் பிடித்தனர்.
அப்போது தனுஷ்கோடியில் இருந்து அரசு பஸ் ஒன்று கோவிலுக்கு வந்தது. கலவர கும்பல் அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தி கண்ணாடியை உடைத்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
அதன்பின்னர் கலவர கும்பலை சேர்ந்தவர்கள் வடக்குவாசல், கீழவாசல் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் முன்பகுதியை அடித்து நொறுக்கினர். மேலும் பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் உள்ள வக்கீல் ராமமூர்த்தி என்பவர் வீட்டுக்கும் கும்பலாக சென்றனர். அங்கு வீட்டில் யாரும் இல்லை. அந்த கும்பல் வக்கீல் ராமமூர்த்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பொருட்களை ரோட்டில் போட்டு சூறையாடினர்.
தீ வைப்பு
கலவரம் பரவுவது குறித்து அறிந்த ராமேசுவரம் போலீசார் அந்த பகுதிக்கு வந்து கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் கலவர கும்பல் திட்டக்குடி பகுதியில் புதிதாக கட்டப்படும் தனியார் தங்கும் விடுதி கட்டிடத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கூரைக்கு தீ வைத்தனர்.
அதே நேரத்தில் வர்த்தகன் தெருவில் உள்ள திருமண மண்டபத்தின் முன்பகுதியில் இருந்த பந்தல் அடித்து நொறுக்கப்பட்டது. அதில் ஈடுபட்ட கும்பல் அங்கு தீ வைத்து விட்டு உள்ளே நுழைந்து நாற்காலி, ஜெனரேட்டர் ஆகியவற்றை வெளியே கொண்டு நடு ரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தது.
இந்த கலவரத்தால் அந்த பகுதியே போர்க்களமானது. தீ பயங்கரமாக எரிந்தது. தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனம் அங்கு விரைந்து வந்தது. ஆனால் கலவர கும்பலை சேர்ந்தவர்கள் தீயை அணைக்க விடாமல் அந்த வாகனத்தை திருப்பி அனுப்பினர்.
அதற்குள் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையிலான போலீசார் வேர்க்கோடு பகுதியில் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் விநாயகமூர்த்தி உள்பட 2 பேரை மீட்டு ராமேசுவரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு கலவரத்தை கட்டுப்படுத்த போராடினர்.
இந்த நிலையில் கலவர கும்பல் வேர்க்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கியது.
பெட்ரோல் குண்டு வீச்சு
அப்போது கலவர கும்பல் இரு தரப்பாக ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டுகளை வீசி பயங்கரமாக மோதிக்கொண்டது. கற்களும், பாட்டில்களும் சரமாரியாக வீசப்பட்டன. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அந்த பகுதியில் இருந்த ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. அதோடு நிற்காத வன்முறை கும்பல் அருகில் இருந்த கடையை உடைத்து அங்கிருந்த பொருட்களை ரோட்டில் போட்டு தீயை வைத்து எரித்தது.
இந்த நிலையில் அங்கு போலீஸ் டி.ஐ.ஜி.ராமசுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் அதிரடிப்படையினருடன் விரைந்து வந்தனர். இரும்புத்தொப்பி அணிந்த கலவர தடுப்பு பிரிவு போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் கலவர கும்பலை விரட்டியடிக்க கண்ணீர் புகை குண்டுகளை 3 முறை வீசினர். தொடர்ந்து கலவர கும்பல் மீது தடியடி நடத்தினர். இதனை தொடர்ந்து கலவர கும்பல் தப்பி ஓடியது.
இந்த கலவரத்தால் ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் முதல் தேவர் சிலை வரை பாட்டில்களும், செருப்புகளும் சிதறிக்கிடந்தன. பக்தர்கள் கோவிலுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். பொதுமக்களும் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கிக்கிடந்தனர். இதையடுத்து டி.ஆர்.ஓ.விஸ்வநாதன், ராமநாதபுரம் தாசில்தார் கதிரேசன், ராமேசுவரம் தாசில்தார் சந்திரவதனி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
வரலாறு காணாத வகையில் நடந்த இந்த கலவரத்தால் பெரும் பதற்றம் நிலவுகிறது.  
 ****
2 சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 போலீசார் காயம்
ராமேசுவரத்தில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்கிக் கொண்டனர். இதில் மோதலை தடுக்கச் சென்ற போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. சப்இன்ஸ்பெக்டர்கள் சின்னகருத்தப்பாண்டி, சாமிதுரை, போலீஸ்காரர்கள் சங்கர், மாலைச்சாமி, கேசவன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.  
 ****
கலவரக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
போலீஸ் டி.ஐ.ஜி. பேட்டி
இந்த பயங்கர கலவரம் குறித்து சரக டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியது:
கலவரம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அந்த பகுதியில் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இன்னும் 2 அல்லது 3 நாட்கள் அவர்கள் இங்கு முகாமிட்டு இருப்பார்கள். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அந்த பகுதியில் முழு அமைதி ஏற்பட்டுள்ளது. 2 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும். எனவே அவர்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

dailythanthi thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக