ஈரான் அண்மையில்
ராடார்களுக்கு அகப்படாமல் பயணிக்கக்கூடிய தொழிநுட்பத்தை உபயோகப்படுத்தி
உருவாக்கப்பட்டதென Qaher-313 என்ற போர் விமானத்தை அறிமுகப்படுத்தியது.
இது முழுமையாக தனது சொந்த நாட்டு தயாரிப்பு என்று ஈரான் அறிவித்திருந்தது.
மேலும் அமெரிக்காவின் F-35, F-22 போர் விமானங்களின் வசதிகளையும் Qaher-313
கொண்டுள்ளதாக ஈரான் குறிப்பிட்டிருந்தது.
இதன் படங்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
இதன் படங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதன் உண்மைத்தன்மை தொடர்பில்
சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.
விமானம் மிகவும் சிறியதாக உள்ளமை, பிளாஸ்ரிக்கினால் உருவாக்கப்பட்டதைப் போன்ற
தோற்றத்தைக் கொண்டுள்ளமை, விமானியொருவர் அமர்ந்து செலுத்துவதற்கான இடவசதி மிகவும்
குறைவாக இருக்கின்றமை போன்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுவொரு மாதிரி விமானமென நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
எனினும் இதற்கு பின்னர் பிரபல ஈரானிய ஊடகமொன்று வெளியிட்ட படமொன்றே சர்ச்சைகளின்
உச்சமாக மாறியுள்ளது. மேலும் இவ்விமானம் நிபுணர்கள் கூறுவது போல போலியானது என்று
நம்பும் அளவுக்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அப்படத்தில் மலையொன்றின் மேலாக ஈரான் அறிமுகப்படுத்திய போர் விமானம் பறந்து
செல்வது போல் காட்டப்பட்டுள்ளது.
குறித்த படத்தில் உள்ள மலையானது ஈரானில் உள்ள 'டமாவன்ட்' எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ள விடயம் என்னவெனில் ஈரான் தற்போது
வெளியிட்டுள்ள படத்தை போன்றதொரு அதாவது 'டமாவன்ட்' மலையின் படம் ஏற்கனவே இணையத்தில்
www.pickywallpapers.com என்ற தளத்தில் உள்ளமையாகும்.
மேலும் இவ்விரு படங்களுக்கிடையே எவ்வித வேறுபாடுகளும் இல்லை. நிறத்தை மட்டும்
சற்றே போட்டொஷொப்பில் மாற்றி மேலும் சில உத்திகளை பயன்படுத்தி விமானமின்றினை
மேலதிகமாக இணைத்து படத்தை வெளியிட்டுள்ளதாக ஏளனத்துக்கு உள்ளாகியுள்ளது ஈரான்.
இதேபோல் ஈரானின் ஏவுகணை பரிசோதனை தொடர்பான படமொன்றும் சர்ச்சையை
ஏற்படுத்தியிருந்தது.
மூன்று ஏவுகணைகளை பரிசோதித்த ஈரான், 4 ஏவுகணைகளை பரிசோதித்தாகக் கூறி படமொன்றை
வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதன்போதும் போட்டோஷொப்பை ஈரான் பயன்படுத்தி ஒரு ஏவுகணையை மேலதிகமாகக் காட்டியமை
நிரூபிக்கப்பட்டதுடன். அப்படம் பிரபல வெளிநாட்டு பத்திரிக்கையொன்றின்
முதற்பக்கத்தில் வெளியாகியிருந்தது.
சரி இவற்றை விட கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிருள்ள குரங்கொன்றை விண்ணுக்கு
ஏவுகணையொன்றில் அனுப்பியதாகவும், அக்குரங்கு பூமிக்கு உயிரிடன்
மீளத்திரும்பியுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. பின்னர்
அப்படங்களையும் வெளியிட்டது.
மேலே உள்ள முதல் படம் குரங்கை விண்வெளிக்கு அனுப்ப முன்னர் எடுக்கப்பட்டதாக
ஈரான் வெளியிட்டது.
அதேபோல் இரண்டாவது படத்தை விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்கு பூமிக்கு திரும்பிய
பின்னர் எடுத்ததாக கூறி ஈரான் வெளியிட்டது.
ஆனால் முதல் படத்தில் குரங்கின் வலது கண்ணுக்கு மேலாக காணப்பட்ட சிகப்பு நிற
மரு, இரண்டாவது படத்தில் காணப்படவில்லை. இவ்விடயம் இணையத்தில் பெரும் விவாதத்தை
தோற்றுவித்தது.
குரங்கு பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுத்ததா என்று ஈரான் கேளிப்
பேச்சுக்கு ஆளாகியது.
இவ்வாறு தொடர்ச்சியாக போட்டோஷொப் சர்ச்சைகளில் சிக்கி வரும் வரலாறு
ஈரானுக்குள்ளது. ஆனாலும் இவற்றை மட்டும் வைத்து ஈரானை குறைத்து மதிப்பிட
முடியாது.
மேலைத்தேய ஊடகங்கள் குறிப்பாக அமெரிக்கப் பத்திரிக்கைகள் ஈரான் மற்றும் வட
கொரியா போன்ற நாடுகளின் தொழிநுட்ப, இராணுவ வளர்ச்சியினை குறைத்து மதிப்பிடுவதுடன்
மட்டம் தட்டும் செயற்பாடுகளில் காலம் காலமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
newsonews thanks |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக