Monday, 04 February 2013 00:09

சிங்கப்பூரில் மரணமடைந்த டெல்லி மாணவி குடும்பத்தினருக்கு வீடு மற்றும் அரசு வேலை கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க மாணவியின் தந்தை நேரம் கேட்டிருந்தார். இதையடுத்து நேற்று முன் தினம், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அம்மாணவியின் வீட்டுக்கு சென்று பெற்றோர் மற்றும் உறவினருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ஒரு மணிநேரத்துக்கு மேல் அவர்களுடன் பேசியுள்ள சோனியா காந்தி, இறந்த மாணவியின் குழந்தை பருவம் மற்றும் அவரது திறமை ஆகியவற்றை பற்றி பரிவுடன் கேட்டறிந்துள்ளார்.
அம்மாணவியின் படித்த அறைக்கு சென்று அவர் உபயோகித்த புத்தககங்களையும் பார்வையிட்டுள்ளார். மேலும் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளதுடன், குற்றவாளிகளுக்கு நிச்சயம் அவர்களது செயலுக்குரிய தண்டனை கிடைக்கும். நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்கள் குடும்பத்தை எனது குடும்பமாகவே பார்க்கிறேன் என ஆறுதல் கூறியதுடன், துவாரகாவில் ஒரு வீடு வழங்கவும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதேவேளை இவ்விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றப்பதிவுகள் நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. 13 பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளது. அதிகபட்சமாக மரணதண்டனை வரை கிடைக்கப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஆறுபேரில் ஆறாவது நபருக்கு இன்னமும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதனால் அவர் சிறுவர் சீர்திருத்த நீதிமன்றத்தில் தனியாக விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். அவருக்கு தண்டனைக்காலம் வெகுவாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
4tamilmedia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக