விருத்தாசலம் திருகொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கடந்த நான்கு நாட்களாக மாணவர்கள் 24 பேர் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் இருந்து வந்தனர். நேற்று மாலை முதல் அரசு அதிகாரிகள் முடித்துக் கொள்ள கெஞ்சினர் பிறகு மிரட்டினர். மாணவர்கள் அசராமல் உறுதியாக இருந்தனர். ஆரம்பம் முதல் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் களத்தில் ஆதரவாக உதவி செய்து வந்தனர்.
ஆய்வாளர் ,முதல்வர், கோட்டாட்சியர் ஆகியோர், “மாணவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு இருக்கக் கூடாது. வெளியே போங்கள்” என்று விரட்டினர். நாமோ, “உங்களுக்கு அதிகாரம் இல்லை, ஜனநாயக முறையில் மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பது கடமை. இவர்களை தனியே இரவில் விட்டு செல்ல முடியாது உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் நாங்கள் இங்கேதான் இருப்போம்” என அறிவித்தோம். “மாணவர்கள் எங்களை போக சொல்லட்டும்.போகிறோம்” என்றோம்.
மாணவர்கள் “வழக்கறிஞர்கள் இங்கேயே இருக்கட்டும்” என ஒரே குரலில் அறிவித்தனர். ஆதரவு கொடுக்க வந்தவர்களை வெளியே போக சொல்லும் காவல் ஆய்வாளர், கோட்டாட்சியரின் இந்த அணுகுமுறை பாசிசத்தன்மை வாய்ந்த்து என வாக்கு வாதம் நடந்த்து. அதிகாரிகள் பின்வாங்கினர்.
அடுத்து கல்லூரி முதல்வர் ஆர்.ஜே.டி. சொல்கிறார் “மாணவர்களை உடனே அப்புறப்படுத்துங்கள் இல்லை என்றால் அனைத்து பேராசிரியருக்கும் சஸ்பெண்ட் உத்திரவு வரும். எனவே உண்ணாவிரத்த்தை முடியுங்கள்” என அவர் பேசினார். இரவு 9-00 மணிக்கு வீட்டில் இருந்த அனைத்து பேராசிரியர்களையும் போன் போட்டு அழைத்தார். பேராசிரியர்கள், பேராசிரியைகள் என 50க்கும் மேற்பட்டோர் ஒன்றாக மாணவர்களை கெஞ்சியும், மிரட்டியும் ஒரே கூப்பாடு போட்டனர். மாணவர்கள் 21-ம்தேதி வரை உண்ணாவிரத்த்தை கைவிட மாட்டோம் என உறுதியாக இருந்ததை பேராசிரியர்கள் நெருக்குதல் கொடுத்து இன்று காலை 9-00 மணிக்குள் முடிக்க வைக்க மாணவர்களை சம்மதிக்க வைத்தனர்.
நாமும் மாணவர்களுக்கு ஆதரவாக மூன்று நாட்களும் இரவு பகலாக அவர்களுடன் தங்கினோம்.பொதுமக்கள் மத்தியில் “நமது அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஈழத்தில் நடந்த இனப்படுக்கொலைக்கு நீதிவிசாரணைக் கேட்டு காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் இருக்கிறார்கள் கல்லூரிக்கு நேரில் சென்று வாழ்த்தி ஆதரவு தெரிவியுங்கள்” என விருத்தாசலம் நகரம் முழுவதும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் பிரசுரம் விநியோகித்தோம். அதன் விளைவாக பலர் வந்து மாணவர்களை பார்த்து ஆதரவு தெரிவித்தனர்.
இன்று காலை 8-00 மணிக்கெல்லாம் கல்லூரிக்கு சுமார் 70 க்கும் முற்பட்ட பேராசிரியர்கள் மாணவர்கள் அமர்ந்திருக்கும் பந்தலுக்கு எதிராக அணிவகுத்து அமர்ந்திருந்தனர். “நமது பேச்சுக்கு மரியாதை தராமல் இருக்கிறார்கள் நன்றி கெட்டவர்கள்” என ஒரு பேராசிரியை கொதித்து எழுந்தார். மாணவர்கள் “உயிரை பணயம் வைத்து இனப்படுகொலைக்கு நீதி கேட்டு போராடுகிறார்கள் அதைவிட உங்கள் சுய கௌரவம் பெரிதா?” என்று நமது தோழர்கள் பதில் சொன்னார்கள்.
துணை ஆட்சியர், தாசில்தார், காவல் ஆய்வாளர் அனைவரும் வந்திருந்தனர். சில மாணவர்களுக்கு மயக்கம் ஏற்படவே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். பேராசிரியர்கள் பொறுக்க முடியாமல்,  “மணி 10 ஆகிவிட்டது. வாக்கு காப்பாத்த வேண்டாமா? எங்களை ஆர்.ஜே.டி கேட்டு கொண்டே இருக்கிறார்.நாங்கள் என்ன பதில் சொல்வது. கடலூர் மாவட்டத்தில் கடலுரில், சிதம்பரத்தில் நேற்றே மாணவர்கள் போராட்டத்தை முடித்து விட்டார்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மட்டும் போராட்டம் நடக்கிறது. அதோடு போன் போட்டு எவ எவனோ கெட்ட வார்த்தையில் திட்டுகிறான் எனக்கு இது தேவையா?” என முதல்வர் கொதித்தெழுந்தார். மாணவர்கள், “மருத்துவ மனைக்கு சென்ற மாணவர்கள் வந்நதும் முறைப்படி முடித்து கொள்கிறோம்” என பதில் கூறினர். மற்ற பேராசிரியர்களும் “எழுந்திரு எழுந்திரு நாங்கள் இவ்வளவு சொல்கிறோம் கேட்க மாட்டேன்கீறிர்கள்” என சளைக்காமல் மாணவர்களின் மீது உளவியல் தாக்குதலை தொடர்ந்து கருணையில்லாமல் தொடுத்து கொண்டே இருந்தனர்.
ஒரு மாணவரின் தாயாரை அழைத்து கண்ணீர் மூலம் போராட்டத்தை கலைக்க முயற்சித்தனர். மாணவர்கள் அனைத்திற்கும் சளைக்காமல் பதில் சொல்லியதுடன் உறுதியாக இருந்தனர். ‘இங்கு மாணவர்களை பேராசிரியர்கள் துன்புறுத்துகிறார்கள் பந்தல் காலை பிடுங்குகிறார்கள்’ என கேள்விப்பட்ட மருத்துவமனையில் இருந்த மாணவர்கள் குளுக்கோஸ் டியுபை பிடுங்கி எரிந்து விட்டு ஒரே ஆட்டோவில் 9 பேர் கல்லூரிக்கு வந்தனர். ஆசிரியர்களை எதிரத்து பேசினர். “நாங்கள் முடித்து கொள்கிறோம் என சொன்ன பிறகு பேராசிரியர்கள் வலுக்கட்டாயமாக தொந்தரவு கொடுப்பது சரியல்ல. போராட்டத்தை முடிக்க முடியாது” என அறிவித்தனர்.
வருவாய்த் துறை அதிகாரிகள் பேராசிரியர்களை அமரச் சொல்லி விட்டு மாணவர்களை சமாதனப்படுத்தி காலை 12-00 மணியளவில் போராட்டத்தை மாணவர்கள் முடித்து கொண்டனர். அடுத்த கட்ட போராட்டத்தை எப்படி செய்யலாம் என தற்போது ஆலோசித்து வருகின்றனர்.
பின் தங்கிய ஊரான விருத்தாசலத்தில் அரசுகலைக்கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள், பெண்கள் என அனைவரும் உறுதியாக அதிகாரிகளையும், பேராசிரியர்களையும் எதிர் கொண்டு மனம் தளராமல் 4 நாள் உண்ணாநிலை போராட்டத்தோடு திருப்தி அடையாமல் அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி ஆலோசிக்கும் ஆற்றல் அனைவரையும் உற்சாகப் படுத்துவதாக அமைந்தது. தொடர்ந்த நமது தோழர்களின் அரவணைப்பு , அதிகாரிகளை அஞ்சாமல் எதிர் கொண்டது, பேராசிரியர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தது ஆகியவற்றை பார்த்த மாணவர்களுக்கு தார்மீக பலத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. போரட்ட உணர்வை மேலும் அதிகப்படுத்தியது.
மார்ச் 17, 2013

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், விருத்தாச்சலம்

வினவு thanks