
கோவை பாரதிபார்க் 4-வது கிராஸ் தெருவில் நேற்று மாலை 5.30 மணியளவில் 18 வயது கல்லூரி மாணவி இரு சக்கர வாகனத்தில் தனது தோழியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை முந்தி சென்று கிண்டல் செய்தனர்.
மாணவியின் வாகனத்துக்கு பின்னால் வருவதும், முன்னால் செல்வதுமாக வாலிபர்கள் 2 பேரும் கல்லூரி மாணவியை கிண்டல் செய்த வண்ணம் சென்றனர். இதனால் மாணவி ரோட்டில் இருசக்கர வாகனத்துடன் திக்குமுக்காடினார். ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் மாணவியின் இரு சக்கர வாகனத்தில் இடித்தனர். இதில் மாணவிகள் 2 பேரும் கீழே விழுந்தனர்.
அப்போது அந்த சாலையில் சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த இடத்துக்கு ஓடி வந்து கீழே விழுந்த மாணவிகளை மீட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிளில் இடித்த வாலிபர்களை சூழ்ந்துகொண்டனர்.
இதுகுறித்து கோவை சாய்பாபா காலணி போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் போலீசார் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். மாணவியும் தனக்கு நேர்ந்தது குறித்து போலீசில் புகார் செய்தார். விசாரணையில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்தது சினிமா நடிகர் என்பது தெரியவந்தது. அவரது பெயர் அஜய் பிரதீப் (வயது 27). இவர் கோவை கே.கே.புதூர் சிந்தாமணி புதூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
நடிகர் அஜய் பிரதீப் மின்சாரம் என்ற படத்தில் துணை நடிகராகவும் பதினெட்டு வயது புயலே,மேகமலை ஆகிய சினிமா படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவருடன் வந்த நண்பர் பெயர் ஈஸ்வரன் (34). சிவானந்தா காலணியை சேர்ந்த இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
நடிகர் அஜய் பிரதீப் அடிக்கடி ஒரு பெண்கள் கல்லூரி முன்பு நின்று கொண்டு இருப்பாராம். அப்போது தான் கல்லூரி முடித்து தோழியுடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த மாணவியை விரட்டி சென்று நடிகர் கிண்டல் செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து நடிகர் அஜய் பிரதீப் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (பெண்னை மானபங்கம்படுத்தும் வகையில் செயல்படுதல்), பெண் கொடுமை தடுப்பு சட்டம் (4) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட நடிகர் அஜய் பிரதீப்பும் அவரது நண்பர் ஈஸ்வரனும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெண் கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நடிகர் அஜய் பிரதீப்பை போலீசார் கைது செய்து சிறைக்கு அழைத்து செல்ல முற்பட்ட போது போலீசாரிடம் 'நான் வளர்ந்து வரும் நடிகன். நண்பருடன் சேர்ந்து தவறு செய்து விட்டேன். இனிமேல் தவறு செய்ய மாட்டேன்' என்று கேட்டுக் கொண்டார். ஆனால் போலீசார் ஏற்க மறுத்து விட்டனர். கோவையை சேர்ந்த அஜய் பிரதீப் சென்னையில் தங்கியிருந்து சினிமா படங்களில் நடித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கோவைக்கு வந்த அவர் பெண்ணை கிண்டல் செய்த வழக்கில் சிக்கிக் கொண்டுள்ளார்.
tamilkurinji thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக